'உணவு ருசியாக இல்லாவிட்டால் மன்னிக்கவும்' மனங்களை வென்ற மாணவனின் கடிதம்

கேரளாவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சமைக்கும் உணவில், சிறு பகுதியை எடுத்து பொட்டலமாக கட்டி, அரசு மருத்துவமனையில் இயங்கும் ஹிருதயபூர்வம் ஸ்டாலில் ஒப்படைக்கிறார்கள்.

Update: 2023-02-07 08:33 GMT

'பசித்தவர்களுக்கு உணவு வழங்குபவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்' என்பதை பின்பற்றி பசித்தோருக்கு உணவு வழங்கும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள் சாப்பிடுவதற்கு உணவு கிடைக்காமல் சிரமப்படும் நிலையை போக்கும் வகையில் உணவு வழங்குபவர்களும் இருக்கிறார்கள். கேரளாவில் இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டி.ஒய்.எப்.ஐ) சார்பில் ஹிருதயபூர்வம் என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் இருந்து உணவு சேகரித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், பார்வையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சமைக்கும் உணவில், சிறு பகுதியை எடுத்து பொட்டலமாக கட்டி, அரசு மருத்துவமனையில் இயங்கும் ஹிருதயபூர்வம் ஸ்டாலில் ஒப்படைக்கிறார்கள். அங்கிருந்து நோயாளிகளுக்கு உணவு வினியோகிக்கப்படுகிறது.

கல்லூரி ஒன்றில் இணை பேராசிரியராக பணி புரியும் ராஜேஷ் மோன்ஜி, தனது தாயை சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். அவருக்கு வழங்குவதற்கு கொடுக்கப்பட்டிருந்த உணவு பொட்டலத்துடன் ஒரு கடிதமும் இணைக்கப்பட்டிருந்தது.

மலையாள மொழியில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில், ''சேட்டா, சேச்சி, தாத்தா, உம்மா, அம்மா (சகோதரன், சகோதரி, தாய்மார்கள்) இந்த உணவு பொட்டலத்தை யார் பெற்றாலும் என்னை மன்னியுங்கள். என் அம்மா வீட்டில் இல்லை. நான் தான் இந்த உணவை தயார் செய்தேன். பள்ளிக்கு செல்வதற்கு நேரமாகிவிட்டதால் அவசரமாக சமைத்தேன். உணவு சுவையாக இல்லாவிட்டால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன்'' என்று எழுதப்பட்டிருந்தது.

அந்த மாணவனின் கடிதத்திற்கு இணை பேராசிரியர் ராஜேஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதில் அளித்துள்ளார். ''குழந்தை... நீங்கள் அனுப்பிய உணவு சுவையாக இருந்தது. அதில் இருந்த ஒவ்வொரு தானியத்திலும் அன்பு நிறைந்திருந்தது. மதம் மற்றும் சாதியின் பெயரால் ஒருவரையொருவர் தொடர்ந்து விரல் நீட்டிக் கொண்டிருக்கும் உலகில், இந்த குழந்தை வழியே மனிதநேயத்தை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் என்ற பொறுப்புடன் அந்த மாணவனின் கடிதத்தில் இருந்த இரண்டு எழுத்து பிழைகளை சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை.

பள்ளிக்கு புறப்பட்டு செல்லும் நேரத்திற்கு இடையே நோயாளிகளுக்கு உணவு சமைத்து கொடுத்த அந்த மாணவனின் செயலும், அவன் எழுதிய கடிதமும் பலருடைய பாராட்டை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்