வீட்டிலேயே அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கலாம்

கெமிக்கல் பேஸ்வாஷிற்கு பதிலாக வீட்டிலேயே இயற்கை பேஸ்வாஷ் தயாரிப்பது எப்படி, தலைமுடி உதிர்விற்கு தீர்வு காண்பது எப்படி, லிப்ஸ்டிக், காஜல், மஸ்காரா, சோப் போன்றவற்றை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி போன்றவற்றை தன்னுடைய சமூக வலைத்தளம் வாயிலாக வழங்குகிறார் புதுச்சேரியை சேர்ந்த மகேஸ்வரி.;

Update:2022-12-11 18:07 IST

ஆபத்து தரும் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருட்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சில நல்ல உள்ளங்களில், புதுச்சேரியை சேர்ந்த மகேஸ்வரியும் ஒருவர். அழகு மோகத்தினால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் டீன் ஏஜ் பெண்களுக்கு, கெமிக்கல் அழகுப்பொருட்களின் தீமைகளை சுட்டிக்காட்டுவதுடன், அதற்கு மாற்றாக நமது வீட்டிலேயே அழகு சாதனப்பொருட்களை தயாரிக்கும் எளிமையான செய்முறைகளை அவர் கற்றுக்கொடுக்கிறார்.

கெமிக்கல் பேஸ்வாஷிற்கு பதிலாக வீட்டிலேயே இயற்கை பேஸ்வாஷ் தயாரிப்பது எப்படி, தலைமுடி உதிர்விற்கு தீர்வு காண்பது எப்படி, லிப்ஸ்டிக், காஜல், மஸ்காரா, சோப் போன்றவற்றை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி போன்றவற்றை தன்னுடைய சமூக வலைத்தளம் வாயிலாக வழங்குகிறார்.

இதனால் இவருக்கு ஏராளமான டீன்-ஏஜ் ரசிகைகள் பட்டாளம் உண்டு. அதோடு மட்டுமின்றி, ஏழை கல்லூரி மாணவிகளுக்கு இந்த பயிற்சிகளை இலவசமாக வழங்கி, அவர்களை சுயதொழில் பெண்களாக மாற்றி அசத்துகிறார். அவருடன் சிறுநேர்காணல்.

* உங்களைப் பற்றி கூறுங்கள்?

பி.ஏ.பி.எல். முடித்துவிட்டு, உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்தேன். சிறுவயதில் இருந்தே, நான் கெமிக்கல் அழகுசாதனப்பொருட்களை அதிகம் பயன்படுத்தியது இல்லை.

வீட்டில் அரைத்த குளியல்பொடி, சிகைக்காய் தூள் இவற்றை பூசியே குளிப்பேன். பாலாடை, பப்பாளி இவற்றை கொண்டே முகத்தை பராமரித்தேன். உடலை அழகுபடுத்தவும், பராமரிக்கவும் பெரும்பாலும் இயற்கை பொருட்கள் அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பொருட்களையே பயன்படுத்தினேன்.

* வழக்கறிஞர், இயற்கை அழகு கலை நிபுணராக மாறியது எப்படி?

திருமணம் முடிந்து, கர்ப்பமாக இருந்த சமயங்களில் வழக்கறிஞர் பணிக்கு சில காலம் ஓய்வு கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த சமயத்தில், கருவில் இருந்த குழந்தைக்கு சளி பிடிக்காமல் இருக்க, இயற்கை பேஸ்பேக்கிற்கு பதிலாக செயற்கை பேஸ்பேக் உபயோகித்தேன். ஆனால் எதிர்பார்த்த பலன் இல்லை. கூடவே, ஒருசில சரும பிரச்சினைகளுக்கு உள்ளானேன். அப்போதுதான், இயற்கை மற்றும் மூலிகை அழகு பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை டீன் ஏஜ் பெண்களிடம் கொண்டு செல்லும் யோசனை வந்தது.

அப்போது, சமூக வலைத்தளங்கள் உறுதுணையாக இருக்க, இயற்கை அழகு பொருட்களின் மேன்மையை உலகிற்கு கொண்டு செல்ல ஆரம்பித்தேன். எனக்கு தெரிந்த பக்குவங்களை செய்து காட்டினேன்.

* மூலிகைப் பொருட்களுடன், உங்களை முழுமையாக ஐக்கியப்படுத்திக்கொண்டது எப்போது?

பிரசவத்திற்கு பிறகு, என்னுடைய பிசியான இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், நிறைய ஓய்வு நேரம் இருப்பதாக உணர்ந்தேன். அந்தசமயத்தில்தான், மூலிகை அழகுசாதனப்பொருட்களை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். நம் முன்னோர்கள், என்னென்ன இயற்கை பொருட்களை எல்லாம் அழகு கலைக்காக பயன்படுத்தினார்கள். அதில் இப்போது எவையெல்லாம் புழக்கத்தில் இருக்கிறது, பிரபலமில்லாதவற்றை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது என யோசித்தேன். இதற்காக 'காஸ்மெட்டிக் பார்முலேஷன்' என்ற படிப்பையும் படித்து முடித்தேன்.

* அது என்ன காஸ்மெட்டிக் பார்முலேஷன் படிப்பு?

வீட்டில் இருக்கக்கூடிய இயல்பான இயற்கை பொருட்களைக் கொண்டு, அழகு கலைக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் கலையை கற்றுக்கொடுக்கும் படிப்பு இது. நிறைய பெண்கள், இதை விரும்பி படிக்கிறார்கள்.

* காஸ்மெட்டிக் பார்முலேஷன் படிப்பு உங்களை எப்படி மாற்றியது?

இந்த படிப்பிற்கு பிறகு, வீட்டில் இருக்கக்கூடிய கற்றாழை, காய்கறி எண்ணெய், தேங்காய் சம்பந்தப்பட்ட பொருட்களை கொண்டு, இயற்கை முறையில் நிறைய அழகு சாதனப்பொருட்களை தயாரித்தேன்.

எலுமிச்சை, ஆலிவ் போன்றவற்றை எல்லாம் எண்ணெய் பதத்திற்கு மாற்றி, அதன் கலவைகளில் நிறைய இயற்கை அழகுப்பொருட்களை செய்தேன்.

அது தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டதால், நிறைய டீன்-ஏஜ் ரசிகைகள் கிடைத்தனர். கெமிக்கல் நிறைந்த பொருட்களை கடைகளில் வாங்கி பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே, நான் உருவாக்கி காண்பித்த எளிமையான அழகு சாதனப் பொருட்கள், அவர்களுக்கு பிடித்திருந்தன. அவர்களும் செய்து பார்த்து, பயன்படுத்தினர். செய்யமுடியாதவர்கள், என்னிடம் உதவி கேட்டனர். நான் அவர்களுக்கு செய்து அனுப்பினேன்.

இயற்கை பொருட்களுக்கு இளம்பெண்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பினால், அடுத்த சில ஆண்டுகளில் 'காஸ்மெட்டாலஜி' மருத்துவர் படிப்பையும், அழகு கலை குறித்த மற்ற படிப்புகளையும் கற்றுக்கொண்டு, கெமிக்கலுக்கு மாற்றான அழகு சாதனப் பொருட்களை இயற்கை முறையில் உருவாக்க தொடங்கினேன்.

* இதுவரை என்னென்ன பொருட்களை உருவாக்கி இருக்கிறீர்கள்?

தேன் மெழுகு மற்றும் வெண்ணெய் கொண்டு (உணவு மற்றும் மருந்து துறை) எப்.டி.சி. அங்கீகரித்திருக்கும் வண்ணங்களில் லிப்ஸ்டிக் உருவாக்கி இருக்கிறேன். பாதாம் பொடி மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை கொண்டு கண்ணை அழகூட்டும் காஜல் செய்திருக்கிறேன். ஆலிவ் ஆயில், மென்தால் மற்றும் பாதாம் பொடிகளை கலந்து மஸ்காரா செய்து காண்பித்திருக்கிறேன்.

புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், அல்ரி பொடி, கரிசலாங்கன்னி, கருவேப்பில்லை மற்றும் புதினா ஆகியவற்றை கொண்டு முடியை கருமையாக்கும் டை தயாரித்திருக்கிறேன். கற்றாழை ஜெல்லுடன் ரோஜா இதழ் மற்றும் பல்வேறு பழங்களை கொண்டு இயற்கை பேஸ்வாஷ் தயாரித்திருக்கிறேன். மூலிகை சோப், குளியல் பொடி... இப்படியாக நிறைய இயற்கை பொருட்களை தயாரித்திருக்கிறேன். கற்றாழை வைத்து, முகப்பரு நீக்கம், முகப்பரு தழும்பு நீக்கம் போன்ற சருமத்தை ஆரோக்கியமாக்கும் பல பொருட்களை தயாரிக்கிறோம். முடி உதிர்விற்கும் வீட்டு ஸ்டைலில், எண்ணெய் தயாரிக்கிறோம்.

* ரசாயனம் கலந்த அழகு சாதனப்பொருட்கள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்?

உதடு வெடிப்பு, உதட்டு புண், வறண்ட உதடுகள், முக கீறல்... இப்படி சின்னச் சின்ன பிரச்சினைகளில் தொடங்கி, சிலருக்கு புற்றுநோய் வரை உண்டாக்கி இருக்கிறது. குறிப்பாக, பல நாட்கள் நீடித்திருக்கும் லிப்ஸ்டிக் மற்றும் முடி சாயங்களில் அமோனியாவின் அளவு அதிகமாக இருப்பதால், புற்றுநோய் பாதிப்புகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

* இயற்கை அழகுசாதனப்பொருட்கள் தயாரிக்க எவ்வளவு செலவாகும்?

மிக குறைவுதான். கடையில் வாங்குவதைவிட, குறைவான செலவிலேயே அதிக அளவிலான அழகு பொருட்களை செய்துவிடலாம். அதனால்தான் நிறைய டீன் ஏஜ் பெண்கள், அவர்களாகவே களமிறங்குகிறார்கள். சில பெண்கள், இதை தொழில் ரீதியாகவும் அணுகுகிறார்கள். ஒருசில கல்லூரி பெண்கள், இந்த நுணுக்கங்களை கற்றுக்கொண்டு தொழில் தொடங்க ஆசைப்பட்டனர். அவர்களுக்கு என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தேன். அந்தவகையில் இன்று, நாங்கள் பெண் சமூகமாக ஒரு சக்தியாக மாறி, இயற்கை அழகுசாதன பொருட்களை தயாரித்து வருகிறோம்.

* முகப்பொலிவு, தன்னம்பிக்கையை அதிகரிக்குமா?

முகமும், உடலும், உடையும் நன்றாக இருக்கும்போதுதான் மனிதர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறிப்பாக, பெண்கள் அவர்களது வாழ்க்கையில் முன்னேற இவை மூன்றும் அவசியம். அந்த தன்னம்பிக்கையை நான் இயற்கை முறையில் வழங்க விரும்பு கிறேன்.

* கெமிக்கல் பொருட்களுக்கும், இயற்கை பொருட்களுக்கும் என்ன வித்தியாசம்?

பிரபலமான சோப்பு, ஷாம்பு நிறுவனங்கள் கூட, அதில் பயன்படுத்தியிருக்கும் கெமிக்கல் பொருட்கள் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளை உண்டாக்குகின்றன என்பதை ஒப்புக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நீங்களே தயாரித்து கொள்ளும் இயற்கை பொருட்கள் தரும் ஆரோக்கிய நன்மைகள்தான், பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

* டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததா?

சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இப்போது எல்லோருமே இயற்கை பொருட்களைதான் எதிர்பார்க்கிறார்கள். அதுவும், அவர்களாகவே தயாரிக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தவே, அதிகம் ஆசைப்படுகிறார்கள். அது எல்லோருக்கும், ஒரு மன நிறைவை கொடுக்கும். கூடவே பாதுகாப்பு உணர்வையும் அதிகமாக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்