100 நாள் வேலைத்திட்டத்தில் வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்கு முன்னுரிமை
கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத்திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.;
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலைத்திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வாய்க்கால்களை தூர்வாரும் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை
மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுதோறும் 100 நாட்கள் வேலை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஊரக பகுதிகளில், ஊராட்சி மன்றங்கள் வழியாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின்படி குறிப்பிட்ட அளவிலான பணிகளை முடிக்கும் நிலையில் ஒரு நாளைக்கு ரூ.214 ஊதியம் வழங்கப்படுகிறது. இப்பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தேர்வு செய்கிறார்கள். இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளில் வாய்க்கால்களை தூர்வாருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வாய்க்கால்களை தூர்வார முன்னுரிமை
ஆறுகளில் இருந்து வாய்க்கால் வழியாகவே பாசன நீர் விவசாய வயல்களுக்கு கொண்டு செல்லப்படும். அதற்கேற்ற வகையில் தடையின்றி பாசனம் மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வார இப்பணியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
வாய்க்கால்களை தூர் வாரும்போது குறிப்பிட்ட இடைவெளிகள் 2 அடி ஆழத்திற்கு, 6 அடி நீளம், 2.5 அடி அகலம் என்ற அளவில் நிலத்தடி நீர் சேமிப்பு கட்டமைப்புகள் பணியாளர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.
44 ஊராட்சிகளில்...
கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெரும்புகழூர், அம்மையப்பன், வண்டாம்பாளை உள்ளிட்ட 44 ஊராட்சிகளிலும் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தின்படி வண்டாம்பாளை ஊராட்சி திருப்பள்ளிமுக்கூடல் கிராமத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.