ஊட்டியில் உறைபனி: சுற்றுலா பயணிகள் குதூகலம்
ஊட்டியில் உறை பனி தாக்கம் அதிகரித்து உள்ளது.;
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவுகிறது. இதனால் மற்ற காலங்களில் குளு, குளுவென காணப்படும் ஊட்டியில் பனிக்காலத்தின் போது உறைபனி கொட்ட தொடங்கும். இந்தநிலையில் நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாக காலநிலை மாற்றம் ஏற்பட்டு, கடந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகளை போல உறைபனியும் தாமதமாக தொடங்கியது.
அந்த வரிசையில் இந்த ஆண்டும் பனிக்காலம் ஊட்டியில் தாமதமாக தொடங்கி உள்ளது. அதாவது வழக்கத்தை விட 40 நாட்களுக்கு பிறகு தாமதமாக கடந்த 12-ந் தேதி முதல் ஊட்டியில் உறைபனி கொட்ட தொடங்கியது. இதன் காரணமாக ஊட்டியில் தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், குதிரை பந்தய மைதானம் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதலே அதிக அளவில் பனி படர்ந்து உறைந்து காணப்பட்டது.
பொதுமக்கள் அவதி
மரம், செடி, கொடி மற்றும் புற்கள் பச்சை நிறத்தில் பசுமையாக தெரிந்து வந்த நிலையில், காலை நேரங்களில் உறைபனி கொட்டி வெண்மையாக காட்சியளிக்கிறது. மேலும் சாலை, அதன் ஓரம் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் மீதும் பனி கொட்டி கிடக்கிறது. சூரியன் நன்றாக உதித்ததும் உறைபனி உருகியும், ஆவியாகி செல்வதும் அழகாக காட்சியளிக்கிறது. இந்த காட்சிகளை பார்வையிடவும், தலைக்குந்தா பகுதிகளில் உள்ள உறை பனியை பார்க்கவும் கடும் குளிரை பொருட்படுத்தாமல் அதிகாலை நேரத்தில் சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். உறை பனியை கையில் எடுத்து கண்டு களித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் குதூகலம் அடைந்துள்ளனர்.
அதே சமயத்தில் உறை பனி தாக்கம் அதிகரிப்பால் கடும் குளிரில் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமல் உள்ளூர் மக்கள், கேரட் உள்ளிட்ட அறுவடை பணிகளுக்கு செல்லும் விவசாய தொழிலாளர்கள் கடும் அவதிப்படுகின்றனர். குளிரை சமாளிக்க கம்பளி உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வேலைக்கு செல்கின்றனர். நேற்று தாவரவியல் பூங்கா பகுதியில் குறைந்தபட்சமாக 3 டிகிரி செல்சியசும், தலைகுந்தா பகுதியில் ஒரு டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்த ஆண்டு வழக்கத்தை விட உறைபனி தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிகிறது.