2-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் 1,030 மனுக்கள் பெறப்பட்டன

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 1,030 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2022-06-06 18:24 GMT



திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 1,030 மனுக்கள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் கடந்த 3-ந்தேதி வருவாய்த்துறையின் மூலம் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு பின்னர் நேற்று ஜமாபந்தி நடைபெற்றது. திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் திருவண்ணாமலை வடக்கு உள்வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

முன்னதாக இதில் கலந்துகொண்டு பட்டா மாற்றம் வீட்டு மனை பட்டா கோருதல், உதவித் தொகை வேண்டி என பல்வேறு கோரிக்கை மனுக்களை அளிக்க ஏராளமான பொதுமக்கள் காலை முதலே திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்திற்கு வருகை தந்தனர். வழக்கமாக ஜமாபந்தி நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்க வேண்டும். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் வர காலதாமதம் ஏற்பட்டதால் மனுக்களை பதிவு செய்து பொதுமக்கள் காத்திருந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கலெக்டர் பகல் 12.15 மணி அளவில் தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடம் கலெக்டர் மனுக்களை பெற்று கொண்டார். இதில் 332 மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (நிலஅளவை பதிவேடு) சுப்பிரமணியன், வேளாண் உதவி இயக்குனர் அன்பழகன், தாசில்தார் சுரேஷ், வட்ட வழங்கல் அலுவலர் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுல், திருவண்ணாமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயராஜ், ரூபா உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வருவாய் ஆய்வாளர் ரேவதி நன்றி கூறினார்.

கீழ்பென்னாத்தூர்



கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று சோமாசிபாடி வருவாய் உள்வட்ட கிராமங்களுக்காக நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். தாசில்தார் சக்கரை, சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தார் பன்னீர்செல்வம், ஜமாபந்தி மேலாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சோமாசிபாடி வருவாய் உள் வட்டத்தை சேர்ந்த 25 கிராமங்களுக்கான கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. அதில் பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வீடு அளவை, நிலஅளவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து 140 மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில் மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், தலைமையிட துணை தாசில்தார் அப்துல்ரவூப், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மாலதி, தலைமையிட சர்வேயர் சாகுல்அமீது, துணை சர்வேயர் முனியன், வருவாய் ஆய்வாளர்கள் மகாலட்சுமி (சோமாசிபாடி), சுதா (கீழ்பென்னாத்தூர்), அல்லி (வேட்டவலம்) மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று தேவிகாபுரம் பிர்க்காவை சேர்ந்த 12 கிராமங்களுக்கான ஜமாபந்தி நடந்தது. அதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டன.

ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் கோவிந்தராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேவிகாபுரம் வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

ஜமாபந்தியில் முருகமங்கலம், தேவிகாபுரம், ஓதலவாடி, தும்பூர், மதுரைபெரும்பட்டூர், மன்சூராபாத், ஆத்துரை உள்பட 12 கிராம மக்களிடம் இருந்து மொத்தம் 138 மனுக்கள் பெறப்பட்டன. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

செங்கம்

செங்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று 2-வது நாளாக நடந்த ஜமாபந்தியில் பாய்ச்சல் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராம பகுதி மக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியர் வெற்றிவேலிடம் வழங்கினர். இதில் பொதுமக்களிடம் இருந்து 420 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக வருவாய்த்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதில் வட்டாட்சியர்கள் முனுசாமி, ரேணுகா, வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ், துணை தாசில்தார் தமிழ்செல்வி, வருவாய் ஆய்வாளர்கள் அமுதா, சரண்ராஜ், நீலகண்டன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் விஜயகுமார், குணாநிதி, சந்திரகுமார், திருமால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்