காஞ்சீபுரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை - வெளிநாடு சுற்றுலா சென்றபோது மர்ம நபர்கள் கைவரிசை

காஞ்சீபுரத்தில் தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2023-03-22 09:50 GMT

காஞ்சீபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் சிமெண்டு, கம்பி, டைல்ஸ், பெயிண்டு உள்ளிட்ட கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் கடையை சத்தியமூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவரது வீடு பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே கண்ணப்பர் தெருவில் உள்ளது. சத்தியமூர்த்தி, தனது மனைவி சுப்ரஜா, மகள் அஷிதா, மகன் ரூபேஷ்தர்மா ஆகியோருடன் கடந்த 13-ந்தேதி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார்.

சுற்றுலா முடிந்து நேற்று வீட்டுக்கு திரும்பிய அவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சத்தியமூர்த்தி வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது படுக்கை அறையில் இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் தங்க நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.5½ லட்சம் போன்றவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடமும் அக்கம் பக்கத்தினரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்