எம்ஜிஆர் நலப்பணியை நாளை முதல் மேற்கொள்வேன் - ஜெ.தீபா

எம்.ஜி.ஆர். நலப்பணியை நாளை முதல் மேற்கொள்வேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறிஉள்ளார்.

Update: 2017-01-16 14:22 GMT

சென்னை, 

முதல்–அமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு, தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது மறைவு அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதியை காண தினமும் ஏராளமானோர் வருகின்றனர். அவ்வாறு வரும் தொண்டர்களில் பலரும் சென்னை தியாகராயநகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீடு முன்பும் குவிந்து வருகின்றனர். தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில், சென்னையில், தீபாவுக்கு ஆதரவாக ஆலோசனை கூட்டமும் நடந்தது. நாளை (செவ்வாய்க்கிழமை) எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாளில், அவர் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று மாலையும் தீபா தனது ஆதரவாளர்களை சந்தித்தார். அவரது வீட்டு முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அவர்கள் ஜெயலலிதா புகழ் ஓங்குக என்றும், தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கோ‌ஷம் எழுப்பினர்.
 
இன்றும் தனது வீட்டு முன் குவிந்து இருந்த தொண்டர்கள் மத்தியில் தீபா பேசினார். இரட்டை விரல்களை உயர்த்தி காட்டினார். தீபா பேசுகையில், எம்ஜிஆர் நலப்பணியை நாளை முதல் மேற்கொள்வேன், தொண்டர்களின் எதிர்பார்ப்பு போன்று என்னுடைய பொதுவாழ்வு அமையும் என்றார். தொண்டர்கள் குவிந்து இருந்த இடத்தில் உங்களுக்காக நான் இருக்கின்றேன் எனவும் ஜெ.தீபா பேசினார். நாளை எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு தொண்டர்களுக்கு தீபா அழைப்பு விடுத்து உள்ளார். 

தொண்டர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் முடிவு எடுப்பேன் என்று குறிப்பிட்டு உள்ளார். 

மேலும் செய்திகள்