அவசர சட்டம் கொண்டு வர மத்திய-மாநில அரசுகளுக்கு அலங்காநல்லூர் மக்கள் மாலை 6 மணி வரை கெடு

ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு இன்று மாலை 6 மணி வரை கெடுவிதித்து அலங்காநல்லூர் மக்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

Update: 2017-01-18 10:22 GMT
மதுரை

விளையாட்டான ஜல்லிக்கட்டு, உச்சநீதிமன்றம் தடை காரணமாக கடந்த 2 ஆண்டாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு அனுமதி கிடைக்காவிட்டால், தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அறிவித்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக எதிர்பாராத திருப்பமாக மாணவர்களும், இளைஞர்களும் களம் இறங்கினர். இதனால் போராட்டம் விசுவரூபம் எடுக்க பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இது தவிர மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஜல்லிக் கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.அலங்காநல்லூரில் மாணவ்ர்கள் - இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்று போலீசார் கைது செய்ததையடுத்து, அவர்களை விடுவிக்கக்கோரி அங்கு ஏராளமான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.இதனால் போராட்டம் விசுவரூபம் எடுக்க அலங்காநல்லூரில் போராட்டம் சூடு பிடித்தது.

ஜல்லிக்கட்டை முறையாக நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என அவர்கள் அறிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து, சென்னை மெரீனாவிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த போராட்டம் விடிய விடிய 2வது நாளாக தொடர்ந்து வருகிறது.இந்த போராட்டம் வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிவருவதால்  மேலும் ஏராளமான இளைஞர்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.

நாளுக்கு நாள் இந்த போராட்டம் வலுப்பெற  மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கல்லூரி மாணவர்களோடு, இளைஞர்களும் திரண்டு  வந்து ஆதரவு  அளித்தனர். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இந்த போராட்டம் தீவிர மடைந்தது.அலங்காநல்லூரில் 3 நாட்களாக வெளி மாவட்ட மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று அலங்காநல்லூர் கிராம கூட்டத்தில் ஒரு முக்கிய தீர்மான நிறைவேற்றபட்டது.

ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு இன்று மாலை 6 மணி வரை கெடுவிதித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

மேலும் செய்திகள்