வேளாண் வளர்ச்சி மூலமே தமிழகத்தில் நிலையான வளர்ச்சியை பெற முடியும்

வேளாண் வளர்ச்சி மூலமே தமிழகத்தில் நிலையான வளர்ச்சியை பெற முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.

Update: 2017-07-19 22:15 GMT

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் குழு நிதி உதவியுடன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜன் கடந்த 2014–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை நடந்த ஆய்வின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டு இருக்கின்றன.

1971–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரையிலான 44 ஆண்டுகளில் தமிழகத்தின் நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இஸ்ரோ நிறுவனத்தின் செயற்கைகோள் படங்களின் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது.

அதில் வேளாண் விளைநிலங்களின் பரப்பளவு 6 ஆயிரத்து 601 சதுர கிலோ மீட்டரில் இருந்து 4 ஆயிரத்து 806 சதுர கிலோ மீட்டராக, அதாவது 27 சதவீதத்துக்கும் கூடுதலாக குறைந்து இருக்கிறது.

காமராஜர் ஆட்சி காலத்துக்கு பிறகு கடந்த 50 ஆண்டுகளில் சொல்லி கொள்ளும்படியாக எந்த ஒரு பாசன திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

அதன்விளைவு தான் தமிழகத்தின் பாசன பரப்பு கணிசமாக குறைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, காமராஜர் ஆட்சிக்காலம் வரை காவிரி பிரச்சினையோ, முல்லை பெரியாறு சிக்கலோ, பாலாற்று அணை விவகாரமோ எழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டின் விளைநிலங்களின் பரப்பு குறைந்திருப்பது தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய வி‌ஷயம் ஆகும். வேளாண் வளர்ச்சியின் மூலமாக தான் தமிழகம் நீடித்த, நிலையான வளர்ச்சியை அடைய முடியும் என்று பா.ம.க. உறுதியாக நம்புகிறது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்