தமிழகத்தில் 5 ஆயிரம் புதிய சொகுசு பஸ்கள் இயக்கப்படும் அமைச்சர் தகவல்
தமிழகத்தில் 5 ஆயிரம் புதிய சொகுசு பஸ்கள் இயக்கப்படும் என்று சாலை பாதுகாப்பு வார தொடக்க விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்தார்.;
சென்னை,
தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று தொடங்கி 29-ந்தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இருந்து, வாலாஜா சாலை, அண்ணாசாலை, மன்றோ சிலை வழியாக போர் நினைவுச்சின்னம் வரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் ஜெயவர்தன், போக்குவரத்து ஏ.டி.ஜி.பி. கரன் சின்ஹா, இணை கமிஷனர் ஆர்.சுதாகர் மற்றும் போக்குவரத்து போலீசார், அரசு டிரைவர்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சாலை போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும். ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.
பேரணியின்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு, அதற்கு கூண்டு கட்டுகிற வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. நிதிநிலை அறிக்கையில் 3 ஆயிரம் பஸ்கள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. எனவே 5 ஆயிரம் புதிய பஸ்கள் நவீன படுக்கை வசதி, கழிப்பறை வசதி, குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ்களாக இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து போலீசார் சார்பில் சிக்னல்கள், முக்கிய சந்திப்புகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.