ஜெயலலிதாவின் கொள்கைப்படி சென்னையை குடிசைகள் இல்லா நகராக மாற்றிக் காட்டுவோம்

ஜெயலலிதா கொள்கையின்படி சென்னையை குடிசைகள் இல்லா நகராக மாற்றிக் காட்டுவோம் என்று சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதி அளித்தார்.

Update: 2018-06-14 00:12 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, தி.மு.க. உறுப்பினர் அரவிந்த் ரமேஷ்(சோழிங்கநல்லூர் தொகுதி), ‘சென்னையில் உள்ள குடிசை பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் கண்ணகி நகருக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் முறையாக இல்லை. வழிபாட்டு தலங்கள் கூட இல்லை’ என்று துணை கேள்வி எழுப்பினார்.

அதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசியதாவது:-

குடிசைப்பகுதி மக்களை குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மறுகுடியமர்த்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கூவம் நதிக்கரையில் வசிக்கும் குடிசைப்பகுதி மக்களுக்கு பெரும்பாக்கத்தில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 8 ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கூடங்கள் உள்பட அடிப்படை வசதிகளுடன் கூடிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.

மத வழிபாட்டு தலங்கள் எப்போதும் அரசால் கட்டி தரப்படாது. சென்னையை பொறுத்தவரை குடிசையற்ற மாநகராக மாற்றுவது மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இலக்கு. தற்போது அரசு அதை தொடர்ந்து செய்து வருகிறது. சென்னையை குடிசைகள் இல்லா நகராக மாற்றிக்காட்டுவோம்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்