கோவில் திருப்பணிகள் செய்பவர்கள் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது மடாதிபதிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

கோவில் நன்கொடைதாரர்களுக்கு மரியாதை இல்லை என்றும், திருப்பணிகள் செய்பவர்கள் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும் மடாதிபதிகள் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Update: 2019-07-09 21:48 GMT
சென்னை,

வடலூர் ஊரன் அடிகளார், காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், திருவலம் சர்வமங்களாபீடம் சாந்தா சுவாமிகள், திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசு சுவாமிகள் உள்பட 10 மடாதிபதிகள் சென்னை மயிலாப்பூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் இந்து கோவில்களும், அறக்கட்டளைகளும் மதசார்பற்ற அரசின் அதிகாரத்தில் இருப்பதால் இந்து ஆன்மிகமும், சமயமும், அறக்கட்டளைகளும் தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலையில் இருக்கின்றன. இதனால் கோவில்கள் பராமரிப்பும், கும்பாபிஷேகமும் சரியான காலத்தில் நடைபெறாமல் இருந்தன. கோவில் திருப்பணிகளுக்கு ஒரு சில தீய சக்திகளால் தற்போது இடையூறும் ஏற்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கடந்த கால தவறான செயல்பாடுகளால் சிலைகள் திருட்டு, சிலைகள் மாற்றம் போன்ற பல குற்றங்களை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு காவல் பிரிவு அமைக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுப்பதை வரவேற்கிறோம்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட கோவில்களில் திருப்பணிகள் செய்வதற்காக தொண்டு உள்ளம் படைத்தவர்களும், பொருள் வளம் படைத்தவர்களும், கொடைதாரர்களும் முன்வருகின்றனர். அவ்வாறு முன் வருபவர்களுக்கு தக்க மரியாதை அளிக்கப்படுவதில்லை. தவறு செய்தவர்களை தண்டிப்பதில் மாற்று கருத்து இல்லை.

அதே சமயத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிடுவதுதான் முறை. கடந்த சில மாதங்களாக பெருங்கொடை அளிக்கக்கூடியவர்கள் மீது சில காரணங்களுக்காக பல முறையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. குற்றம் உறுதி செய்யப்படாத நிலையில் விசாரணை நிலுவையில் இருக்கும்போது நன்கொடை அளித்தவர்களின் புகழுக்கும், மானத்துக்கும் பங்கம் ஏற்படும் விதத்தில் போலீசாரும், ஊடகத்துறையும், நீதித்துறையும் நடந்து கொள்ளக்கூடாது.

குறிப்பாக ஸ்ரீரங்கம் கோவிலின் மிக விரிவான திருப்பணியை செய்தவர் ஒருவரின் அறப்பணிகளை கொச்சைப்படுத்தும் விதமாக சில தீய சக்திகள் அவருக்கு எதிராக வழக்குகள் தொடுத்து, அறப்பணி செய்தவரையே குற்றவாளியாக சித்தரித்து காட்ட முயற்சித்து வருகின்றனர்.

கோவில் திருப்பணிகள் செய்பவர்களுக்கு எதிரான தீய சக்திகள் பாதகமான பல வீண் பழிகளை போட்டு, திருப்பணிகள் செய்பவர்கள் மனமுடைந்து திருப்பணிகள் செய்வதை விட்டு வெளியேற ஆற்றப்படும் சதிகளை பொதுமக்களும், அதிகாரிகளும், நீதித்துறையும், போலீசாரும் அடையாளம் காணவேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்