பெற்றோரை இழந்த பெண்... திருமணத்திற்கு முன்பே பிறந்த குழந்தை... அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்

ஹரிபிரியாவுக்கு பிறந்த குழந்தையின் டி.என்.ஏ.வும், பிரகாசின் டி.என்.ஏ.வும் ஒன்றாக இருந்தது.

Update: 2024-05-26 11:48 GMT

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வலசக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் ஹரிபிரியா(வயது 20). ஹரிபிரியாவின் தாய் அனிதா ஏற்கனவே இறந்து விட்டார். தந்தையும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பெற்றோர் இறந்து விட்டதையடுத்து ஹரிபிரியா, தனது பெரியப்பா பாஸ்கரன் ஆதரவில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் பக்கத்து கிராமமான வலசேரிக்காடு கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் மகன் பிரகாசுக்கும், ஹரிபிரியாவுக்கும் நட்பு ஏற்பட்டது. பின்னர் இந்த நட்பு காதலாக மாறி இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இதனால் கர்ப்பமான ஹரிபிரியாவுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

ஹரிபிரியாவுக்கு பிறந்த குழந்தை தனக்கு பிறந்தது இல்லை என கூறி ஹரிபிரியாவை விட்டு பிரகாஷ் விலகினார். இதுகுறித்து பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் ஹரிபிரியா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். இதையடுத்து நடத்தப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனையில் ஹரிபிரியாவுக்கு பிறந்த குழந்தையின் டி.என்.ஏ.வும், பிரகாசின் டி.என்.ஏ.வும் ஒன்றாக இருந்தது. இதையடுத்து பிரகாசை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த பிரகாஷ், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக ஹரிபிரியாவுக்கு தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிபிரியா, நேற்று பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தின் முன்பு காதலனுடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி தனது கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிபிரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரகாஷ் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் ஹரிபிரியா தர்ணா போராட்டத்தை கைவிட்டார்.

ஹரிபிரியாவின் இந்த தர்ணா போராட்டத்தால் மகளிர் போலீஸ் நிலையம் 1 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்