தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-05-26 13:01 GMT

சென்னை,

கோடை விடுமுறை முடிந்து 2024-25-ம் கல்வியாண்டில் 1 முதல் பிளஸ்-2 வகுப்புகளுக்கு அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே குறிப்பிட்ட நாளில், பள்ளிகளை தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்குமுன் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கல்விச் செயல்பாடுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

பள்ளியில் அனைத்து வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறை உட்பட பிற அறைகள், வளாகங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள், கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

காலாவதியான ஆய்வக பொருட்களை முறைப்படி பதிவேட்டில் பதிவு செய்து நீக்கம் செய்ய வேண்டும். கட்டிடங்களின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி, மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

மாணவர் பயன்பாட்டுக்கான குடிநீர் தொட்டி, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அனைத்தையும் உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து, தூய்மையாகவும், பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வழிசெய்ய வேண்டும். திறந்தவெளிக் கிணறுகள், கழிவு நீர் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகள் தொடங்குவதற்கு முன்பாகவே இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும்.

அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாக படிக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுதவிர பள்ளி வளாகத்தில் பழுதான கட்டிடங்கள், உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் ஏதாவது இருந்தால் அந்த கட்டிடங்களை மாணவர்கள் அணுகாதபடி உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து மின்சாதனங்கள் நல்ல முறையில் உள்ளதா என்பதை ஆசிரியர்கள் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

வளாகத்தில் உள்ள மரங்களில் ஒடிந்த கிளைகள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கிளைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், பெற்றோர்களை ஒவ்வொரு மாதமும் பள்ளிக்கு அழைத்து, மாணவர் வருகை, உடல் நலம், மனநலம், கற்றல் அடைவு, விளையாட்டு உள்ளிட்ட பள்ளியின் அனைத்து நிகழ்வுகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும்.

6 முதல் 10-ம் வகுப்பு வரையான மாணவர்கள் இலக்கிய மன்றம், சுற்றுச்சூழல் மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள், கலை செயல்பாடுகளில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை காலை வணக்கக்கூட்டத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு சார்ந்த தகவல்கள், கவிதை, சுவரொட்டி, நாடகம், பாட்டு, திருக்குறள் கதைகள் இடம் பெற வேண்டும்.

காலை உணவுத் திட்டம் அனைத்து குழந்தைகளுக்கும் குறித்த நேரத்தில், தரமானதாக அளிக்கப்பட வேண்டும். வாரம் ஒருநாள் மாணவர்களின் மனநலன் சார்ந்து ஆலோசனை வழங்க வேண்டும். பள்ளிகள் திறந்த முதல் நாளே அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்தப்பட வேண்டும்.

பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் பள்ளி செல்லும் வயதுடைய அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்