நன்னடத்தை குறித்து தவறாக சான்றிதழ்: பாதிக்கப்பட்ட மாணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் மூகாம்பிகை மருத்துவ கல்லூரிக்கு நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

நன்னடத்தை குறித்து உள்நோக்கத்துடன் தவறாக சான்றிதழ் வழங்கியதால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு மூகாம்பிகை மருத்துவக்கல்லூரி நிர்வாகம் இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்று மாநில நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-08-15 22:15 GMT
சென்னை, 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுகாம்பிகை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு படிப்பை முடித்த பாலசுந்தரராஜ் என்பவர் சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மூகாம்பிகை கல்லூரியில் படிப்பை முடித்த நான், பயிற்சியை மட்டும் முடிக்க வேண்டியது இருந்தது. எனது பெற்றோர் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரியில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவதால் அங்கு பயிற்சியை மேற்கொள்வதற்காக சான்றிதழ்களை வழங்க கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டேன்.

தவறாக சான்றிதழ்

ஆனால் கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களை வழங்கவில்லை. இதுதொடர்பான வழக்கில், கட்டண பாக்கி ரூ.75 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு சான்றிதழ்களை வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, என்னிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட கல்லூரி நிர்வாகம் சான்றிதழ்களை வழங்கியது. ஆனால், மாற்று சான்றிதழில் ‘எனது நன்னடத்தை திருப்திகரமாக இல்லை’ என்று தேவையில்லாமல் குறிப்பிட்டது.

இதனால் எனது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எனக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ரூ.20 லட்சம் இழப்பீடு

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.தமிழ்வாணன், உறுப்பினர்கள் பாஸ்கரன், லதா மகேஸ்வரி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஐகோர்ட்டு உத்தரவுப்படி மனுதாரர் கட்டண பாக்கியை செலுத்திவிட்டதால் கல்லூரி நிர்வாகம் முறையாக நன்னடத்தை சான்றிதழை வழங்கி இருக்க வேண்டும். உள்நோக்கத்தோடு மனுதாரரின் நன்னடத்தை திருப்திகரமாக இல்லை என்று சான்றிதழில் குறிப்பிட்டது கண்டிக்கத்தக்கது.

மனுதாரரின் எதிர்காலம் பாதிக்கின்ற வகையில் கல்லூரி நிர்வாகம் நடந்து கொண்டது சட்டத்துக்கு புறம்பானது.

எனவே, மனுதாரருக்கு கல்லூரி நிர்வாகம் இழப்பீடாக ரூ.20 லட்சமும், வழக்கு செலவுக்காக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்