திருச்செந்தூரில் விரைவில் திறக்கப்படும்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் 95 சதவீதம் நிறைவு - அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. எனவே, மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

Update: 2019-11-04 23:31 GMT
தென்காசி, 

சாமி தரிசனம்

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று குற்றாலம் வந்தார். இங்குள்ள குற்றாலநாத சுவாமி கோவிலில் காலையில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவுக்கு முன்னோடி தாமிரபரணி

வடமாநிலங்களில் கங்கை, யமுனை, கோதாவரி நதிகளில் மகாபுஷ்கரம் நடைபெறுவது வழக்கம். தமிழகத்திலும் ஆன்மிக பெரியவர்கள், பல்வேறு சமுதாயத்தினர், பொதுமக்கள் காவிரியில் கடந்த ஆண்டு புஷ்கரம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அரசு அதனை சிறப்பாக நடத்தியது. மேலும் 144 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணியில் மகா புஷ்கரம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது.

நேற்று தாமிரபரணியில் புஷ்கர நிறைவு விழா நடந்தது. இதில் காஞ்சி மடத்தில் இருந்து வந்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டார். தாமிரபரணிக்கு மற்றொரு சிறப்பு உண்டு. இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி- கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு திட்டம் 90 சதவீதம் முடிந்துவிட்டது. அந்த வகையில் இந்தியாவுக்கே முன்னோடியாக தாமிரபரணி உள்ளது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம்

திருச்செந்தூரில் அமைக்கப்பட்டு வரும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது. இந்த பணிகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதன்பிறகு கூடுதலாக ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்து உள்ளன. மணிமண்டபத்தில் நிறுவுவதற்காக டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் முழுஉருவ வெண்கலச்சிலை சென்னையில் தயார் நிலையில் உள்ளது.

மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைக்க வேண்டுமென்று ‘தினத்தந்தி’ குடும்பத்தினரும், தென்மாவட்ட மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அவரும் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். எனவே, தென்மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க விரைவில் இந்த மணிமண்டபம் திறக்கப்படும்.

தமிழகத்துக்கு பெருமை

நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் விருது வழங்கப்படுவது குறித்து சம்பந்தமில்லாத பல்வேறு கருத்துகள் பேசப்படுகின்றன. நான் தமிழகத்தில் பொறுப்பு வகிப்பதுபோல் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் இருக்கிறார். அவரது துறை மூலம் சிறந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. வாழ்நாள் சாதனையாளர் விருது முதன்முதலாக அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது.

அதன்பிறகு தமிழகத்தை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவது தமிழகத்துக்கு பெருமை. இதில் அரசியல் எதுவும் கிடையாது. மாநில அரசுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை. கோவாவில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக கலைஞர்களும் கலந்து கொள்ளும் அளவுக்கு ரூ.10 லட்சம் நிதி அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு 50-வது ஆண்டு பொன் விழா நடைபெறுகிறது. இதில் நானும் கலந்து கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

மேலும் செய்திகள்