கேரளாவில் விமான விபத்து; நிலச்சரிவு சம்பவம்: எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற விமான விபத்துக்கு எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Update: 2020-08-08 23:15 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து சுமார் 191 நபர்களுடன் கேரள மாநிலம், கோழிகோடு விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்த ஏர் இந்திய விமானம், தரையிரங்கும் போது விபத்துக்குள்ளாகியது. இதில், விமானி உள்பட பயணிகள் உயிரிழந்து உள்ளதாகவும், பெரும்பாலான பயணிகள் காயமடைந்து உள்ளதாகவும் வந்த செய்தி எனக்கு மிகுந்த வேதனை அளித்தது.

இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் பெரும்பாலானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியை அறிந்தேன். இவர்கள் அனைவரும் பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தனது டுவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்:- கொரோனா தொற்று நெருக்கடியால் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதோடு, காயம் அடைந்தவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்.

கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- கேரள மாநிலம் மூணாறு அருகே கன மழையால் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலியாகிய செய்தி நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. நிலச்சரிவில் பலியான தமிழர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போல, கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் பலியான பயணிகளின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:- துபாயில் இருந்து 191 பேருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானி உள்பட பலர் பலியாகினர். இதே போன்று, மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழர்கள் பலர் உயிரோடு மண்ணில் புதைந்துள்ளனர். இந்த சம்பவங்களில் மரணம் அடைந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், திருநாவுக்கரசர் எம்.பி., அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்