மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவே பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு - மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால்

மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதை கருத்தில் கொண்டே பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்படுகிறது என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

Update: 2020-08-18 02:04 GMT
புதுடெல்லி,

கொரோனா காரணமாக நடத்த முடியாமல் இருக்கும் பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பான பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன.

இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால்  பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதை கருத்தில் கொண்டே பல்கலைக்கழக மானியக்குழு பல்கலைக்கழக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடிவு செய்து உள்ளது. எதிர்காலத்தில் மாணவர்கள் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளாமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன், ஆப்லைன் அல்லது கலப்பு முறையில் தேர்வுகளை நடத்துவதற்கான விருப்பம் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய கல்விக்கொள்கை உலக அரங்கில் ஒரு தலைவராக இந்தியாவின் நிலையை பலப்படுத்தும். 2035-ம் ஆண்டுக்குள் மொத்த சேர்க்கை விகிதத்தை (ஜி.இ.ஆர்.) 50 சதவீதமாக உயர்த்துவதை இலக்காக கொண்டு இருக்கிறோம். இது நாம் அடைய வேண்டிய மிகப்பெரிய இலக்காகும். இதன் அர்த்தம் 3 கோடியே 50 லட்சம் மாணவர்களை சேர்ப்பதாகும்.

புதிய கல்விக்கொள்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் ஆகும். ஆராய்ச்சியை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை திட்டமிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 45 கலை கல்லூரிகளை மேம்படுத்துவதும், அந்த கல்லூரிகளுக்கு சுயாட்சி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 8 ஆயிரம் கல்லூரிகளுக்கு மட்டுமே சுயாட்சி உள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்