தமிழகம் முழுவதும் நாளை தளர்வு இல்லா முழு ஊரடங்கு

தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

Update: 2020-08-22 12:10 GMT
கோப்பு படம் (பிடிஐ)
சென்னை,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக இருந்து வருகிறது. இதனால், பல்வேறு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 7-வது கட்ட ஊரடங்கு நடைபெற்று வருகிறது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரடங்கின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 7-வது கட்ட ஊரடங்கின் 4-வது ஞாயிற்றுக்கிழமையான  நாளை தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது  நாளைய தினம் பாலகங்கள் மற்றும் மருந்து கடைகள் தவிர்த்து காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படும்.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் தான் தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படுகிறது. எனினும் மக்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான மீன், இறைச்சி போன்ற அசைவ பொருட்களை இன்றே  வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்துக்கொள்வதை காண முடிகிறது.

இதனால் சென்னையில் உள்ள மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டுகளில்  இன்று சற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதேபோன்று காய்கறி மார்க்கெட்டுகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

தளர்வு இல்லாத ஊரடங்கு உத்தரவு நாளை அமல்படுத்தப்படுவதால், மருத்துவ காரணங்கள் இன்றி அனாவசியமாக வெளியில் வரும் வாகனங்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. தலைநகர் சென்னையில் 195 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர்.

மேலும் செய்திகள்