சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில் சட்டசபையில் முன்வரிசைக்கு போட்டி போட்ட பிரின்ஸ், விஜயதரணி

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், சட்டசபையில் முன்வரிசை இருக்கைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் போட்டி போட்டனர். இதனால், உள்கட்சி பிரச்சினை அவையிலும் எதிரொலித்தது.

Update: 2021-05-13 01:09 GMT
சென்னை, 

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபையில் 3-வது பிரதான கட்சியாக காங்கிரஸ் கட்சி விளங்குகிறது. இந்த நிலையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 7-ந்தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனின் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

ஜே.ஜி.பிரின்ஸ், விஜயதரணி இடையே போட்டி நிலவியதால், அன்றைய தினம் முடிவு எட்டப்படவில்லை. சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரை அகில இந்திய தலைவர் சோனியாகாந்தி தேர்ந்தெடுப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

சட்டசபையிலும் எதிரொலித்தது

ஆனால், இதுவரை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் யார்? என்பது அறிவிக்கப்படாத நிலையில், அந்தப் பிரச்சினை சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது. நேற்று முன்தினம் கூடிய 16-வது சட்டசபையின் முதல் கூட்டத்தில், எதிர் வரிசையில், முதலில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 3-வதாக பா.ம.க. சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இருந்தனர். 4-வது இடத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதரணி இருந்தார்.

ஆனால், நேற்றைய கூட்டத்திற்கு காலை 9 மணிக்கே வந்த ஜே.ஜி.பிரின்ஸ், அந்த இடத்தை பிடித்துக் கொண்டார். சற்று நேரத்தில் வந்த விஜயதரணி, ஜே.ஜி.பிரின்ஸ் 4-வது இருக்கையில் அமர்ந்ததால், அதற்கு முந்தைய இருக்கையான ஜி.கே.மணி இருக்கையில் அவர் அமர்ந்து கொண்டார்.

ஜி.கே.மணி அதிர்ச்சி

ஆனால், கூட்டம் தொடங்கும் நேரத்தில் காலை 9.58 மணிக்கு சட்டசபைக்கு வந்த ஜி.கே.மணி, தனது இருக்கையில் விஜயதரணி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, சட்டசபை கூட்டம் தொடங்கியது. இதனால், அவசர அவசரமாக விஜயதரணி அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்புறம் இருந்த இருக்கையில் அவர் அமர்ந்தார்.

சபாநாயகராக ஒருமனதாக தேர்வு பெற்ற அப்பாவு இருக்கையில் அமர வைக்கப்பட்டபிறகு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து அனைத்து கட்சி தலைவர்கள் பேசினார்கள். அப்போது, காங்கிரஸ் கட்சி சார்பில் ஜே.ஜி.பிரின்ஸ் பேச அழைக்கப்பட்டார். இதனால், விஜயதரணியும் பேசுவதற்காக கையை உயர்த்தினார். ஆனால், வாய்ப்பு வழங்கப்படவில்லை.

உள்கட்சி பூசல்

ஜே.ஜி.பிரின்சை தொடர்ந்து, பேசுவதற்காக ஜி.கே.மணி அழைக்கப்பட்டார். ஆனால், விஜயதரணி அமர்ந்திருக்க இருக்கைக்கு முன்னால் உள்ள மைக்குக்கே மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதனால், ஜி.கே.மணி அங்கு பேசவந்தபோது, பின் இருக்கைக்கு விஜயதரணி சென்றுவிட்டார். ஜி.கே.மணி பேசி முடித்ததும், மீண்டும் தான் இருந்த இருக்கையை அவர் கேட்டுப் பெற்றுக்கொண்டார். இந்தப் பிரச்சினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை எடுத்துச் செல்லப்பட்டது.

இறுதியாக, ஏற்புரை வழங்கி சபாநாயகர் அப்பாவு பேசும்போது, ‘‘என்னை வாழ்த்தி பேசியவர்களுக்கு நன்றி. என்னை வாழ்த்தி பேச காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணியும் அனுமதி கேட்டார். கட்சிக்கு ஒருவர் என்ற முறையில்தான் அனுமதி கொடுக்க முடியும். 2 பேருக்கு அனுமதி வழங்கினால் முதல் கோணல், முற்றிலும் கோணல் என்றாகிவிடும்’’ என்று கூறினார்.

பொதுவாக, காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் என்பது நீருபூத்த நெருப்பாக எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அது இப்போது சட்டசபையிலும் எதிரொலித்திருக்கிறது.

மேலும் செய்திகள்