அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட்டது

அரசு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு முட்டை வழங்கப்பட்டது.;

Update:2021-06-02 02:47 IST
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு முட்டைகள் வழங்க தமிழக அரசின் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி நேற்று முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகளின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் அனுமதிக்கப்பட்ட முட்டைகள் வழங்கப்பட்டன.
ஈரோடு எஸ்.கே.சி.ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் நேற்று முட்டைகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை கே.சுமதி ஆலோசனையின் பேரில், சத்துணவு அமைப்பாளர் நிர்மலா மாணவ- மாணவிகளின் பெற்றோரிடம் சத்துணவு முட்டைகளை வழங்கினார். இதை முன்னிட்டு நேற்று மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பள்ளிக்கூடத்தின் முன்பு கிருமி நாசினி தெளித்து பிளீச்சிங் பவுடர்கள் போட்டனர். இதுபற்றி சத்துணவு அமைப்பாளர் நில்மலா கூறும்போது, “அரசு வழங்கி உள்ள அறிவுறுத்தலின் பேரில், சத்துணவு சாப்பிடும் அனைத்து மாணவ- மாணவிகளின் பெற்றோருக்கும் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி, ஒவ்வொரு வகுப்பு வாரியாக அவர்கள் வரவேண்டிய நேரத்தை குறிப்பிட்டு உள்ளோம். அதன்படி அவர்கள் வந்ததும் கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னர் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட முட்டைகளை வழங்குகிறோம். பெற்றோரும் இடைவெளியை கடைபிடித்து, குறிப்பிட்ட நேரத்தில் வந்து முட்டை வாங்கி செல்கிறார்கள்” என்றார். இதுபோல் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் முட்டை வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்