இந்திய குடியுரிமை பெற்றவரை வெளிநாட்டவர் முகாமில் அடைத்த அரசு உத்தரவு ரத்து ஐகோர்ட்டு தீர்ப்பு

இந்திய குடியுரிமை பெற்றவரை அயல்நாட்டவர்களுக்கான சிறப்பு முகாமில் அடைத்த தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்துசெய்து ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2021-08-15 04:05 GMT
சென்னை,

வங்காளதேசத்தில் பிறந்து வளர்ந்த இந்து மதத்தைச் சேர்ந்த சுஷீல் சர்கார் என்பவர் தன் குடும்பத்தினருடன் 1996-ம் ஆண்டில் தனது 13 வயதில் இந்தியா வந்தார். கொல்கத்தாவில் குடியேறி, 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்திய குடிமகனாக பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டுகளை பெற்றுள்ளார். வேலைவாய்ப்புக்காக சிங்கப்பூர் சென்ற அவர், அங்கிருந்து கடந்த மார்ச் மாதம் நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை பரிசோதித்த குடியேற்ற அதிகாரிகள், அதில் வங்காளதேசத்தை சேர்ந்தவர் என்பதை குறிப்பிடாமல் போலி முகவரி மூலம் பாஸ்போர்ட் பெற்றுள்ளதாக கூறி அவரை கைது செய்தனர்.

விடுவிக்க வேண்டும்

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த அவரை பிடித்து, திருச்சியில் உள்ள வெளிநாட்டவர் சிறப்பு முகாமில் அடைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சுஷீல் சர்காரின் மனைவி ரூமா சர்கார் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், ‘ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மை இந்துக்களாக இருந்து இந்தியாவுக்கு 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு வந்தவர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை, பாஸ்போர்ட் ஆகியவற்றை வழங்கியுள்ளது. எனவே, இந்திய குடியுரிமை பெற்ற சுஷீல் சர்காரை அயல்நாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைத்தது தவறு. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். சுஷீல் சர்காரை உடனே விடுவிக்கவேண்டும்’ என்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் செய்திகள்