அரசு ஆஸ்பத்திரி விடுதியில் பயிற்சி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

மன அழுத்தத்தால் திருச்சி அரசு ஆஸ்பத்திரி விடுதியில் பயிற்சி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-09-17 20:06 GMT
திருச்சி,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சின்னய்யா கவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது 24). இவர் எம்.பி.பி.எஸ். படித்து முடித்துவிட்டு ஓராண்டு பயிற்சி டாக்டராக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார்.

மேலும் இவர், அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பகல் விடுதி அறைக்கு சென்ற ரஞ்சித்குமார் அதன்பிறகு மீண்டும் வெளியே வரவில்லை. நீண்டநேரமாக அவரை காணாததால் நண்பர்கள் சந்தேகம் அடைந்தனர்.

தற்கொலை

நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர் தங்கிருந்த விடுதி அறையின் ஜன்னல் கதவை திறந்து உள்ளே எட்டி பார்த்தனர். அங்கு ரஞ்சித்குமார் மின்விசிறியில் நைலான் கயிற்றால் போடப்பட்ட தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று விடுதி அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வரும் ரஞ்சித்குமாருக்கு தேர்வில் அரியர் இருந்துள்ளது. ஆனால் அவருடன் படித்த மற்ற மாணவர்கள் கடந்த ஜூன் மாதமே பயிற்சியை முடித்து சென்றுவிட்டனர்.

மன அழுத்தம்

அரியரை முடிக்காததால் ரஞ்சித்குமார் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தான் அரியர் தேர்வுகளை முடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனஅழுத்ததில் இருந்ததாகவும், அதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இருப்பினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்