சிவாஜி கணேசன் பிறந்த நாள்; மணிமண்டபத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

நடிகர் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Update: 2021-10-01 05:30 GMT
சென்னை,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாளையொட்டி   சென்னை, அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  பங்கேற்றனர். 

நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1 ஆம் நாள் பிறந்தார். "நடிப்பு தனது மூச்சு என்றும் நடிப்பு ஒன்றுதான் தனக்குத் தெரிந்த தொழில், நடிப்புதான் எனக்குத் தெய்வம்" என்று மிகத் தெளிவாக தன்சுயசரிதையில் குறிப்பிட்டு அதற்கேற்ப வாழ்ந்தும், நடிப்பிலே உச்சம் தொட்டும், உலகப் புகழ் பெற்றவராவர்.

குழந்தைப் பருவம் முதற்கொண்டே நடிப்பதில் பேரார்வம் கொண்டு, பல்வேறு நாடக குழுக்களில் பங்கேற்று நடித்து வந்தார். அண்ணாவால் எழுதப்பட்ட "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" என்கிற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் நடிப்புத் திறமையினைக் கண்ட பெரியார் வியந்து பாராட்டியதோடு, விழுப்புரம் சின்னையப் பிள்ளை கணேசன் என்ற அவரது இயற்பெயரை "சிவாஜி கணேசன்" என்று பெயர் சூட்டினார். உலகப் புகழ்பெற்ற நடிகர் திலகத்திற்கு இந்த பெயரே இறுதிவரை நிலைத்து நின்றது.

நடிகர் திலகத்தின் திறமைக்குச் சான்றாக பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது மற்றும் நம் தாய்நாட்டின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளோடு அயல்நாட்டின் உயரிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இயற்கை எய்தினார்.

மேலும் செய்திகள்