சென்னை, நாமக்கல், திண்டுக்கல், தூத்துக்குடி 4 மாவட்டங்களில் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள்

சென்னை, நாமக்கல், திண்டுக்கல், தூத்துக்குடி 4 மாவட்டங்களில் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் அமைச்சர் சேகர்பாபு தகவல்.

Update: 2021-10-07 22:06 GMT
சென்னை,

சென்னை, புரசைவாக்கம் கங்காதீசுவரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. புதிதாக 4 கல்லூரிகளுக்கு உயர்கல்வி துறையிடம் அனுமதி பெற்றுள்ளோம்.

அதன்படி சென்னை கொளத்தூர் எவர் எக்ஸல் பிளாக்கில் ஸ்ரீ கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா அம்பளிக்கை என்ற இடத்தில் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என கோவில் பெயர்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகிறது.

இந்த கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவான பி.காம், பி.சி.ஏ., பி.பி.ஏ., பி.எஸ்.சி. கணினி அறிவியல் ஆகிய 4 பாடப்பிரிவுகள், தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற ஆன்மிக பாடப்பிரிவுகள் இடம்பெறவுள்ளன.

கொரோனா தொற்று முழுமையாக குறைந்த பிறகு அனைத்து நாட்களிலும் கோவில் திறப்பதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். போராட வலுவான காரணம் இல்லாததால் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்