மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து 12 மினி பஸ்கள் இயக்கம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக்கழகத்தின் 12 இணைப்பு மினி பஸ்கள் இயக்கத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2021-11-30 23:19 GMT
சென்னை,

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு நவீன வசதிகளை அளிக்கும் வகையிலும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் செயல்படுகிறது. என்றாலும் சில மெட்ரோ ரெயில்நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்வதில் சிரமம் உள்ளது.

பொதுமக்கள் மெட்ரோ ரெயில்நிலையத்தை எளிதாக சென்றடையும் வகையில் வசதிகளை மெட்ரோ நிர்வாகம் செய்துவருகிறது.

12 மினி பஸ்கள் இயக்கம்

இதன் ஒரு பகுதியாக, மெட்ரோ ரெயில் பயணிகள் சிரமமின்றி, விரைவாக பயணம் மேற்கொள்ள 12 இணைப்பு மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. தினசரி 148 முறை (நடைகள்) இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மடிப்பாக்கம் பஸ் நிலையத்திற்கு 2 பஸ்கள் மூலம் 28 முறையும், போரூருக்கு 2 பஸ்கள் மூலம் 28 முறையும், விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து குன்றத்தூருக்கு 2 பஸ்கள் மூலம் 20 முறையும் மினிபஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

அதுபோல திருவொற்றியூர் பஸ் நிலையத்தில் இருந்து மணலிக்கு 2 பஸ்கள் மூலம் 24 முறையும், கோயம்பேடு பஸ் நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து மதுரவாயல் ஏரிக்கரை வரை 2 பஸ்கள் முலம் 24 முறையும், கோயம்பேடு பஸ் நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து நொளம்பூர் சக்தி நகர் வரை 2 பஸ்கள் 24 முறையும் இயக்கப்பட உள்ளது. இதன்படி 12 மினி பஸ்கள் மொத்தம் 148 முறை இயக்கப்படுகிறது.

கைத்தட்டி வரவேற்பு

மினிபஸ் தொடக்கவிழாவையொட்டி ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதன் எதிரில் 12 மினி பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. மேடையில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் இருந்தனர். தலைமைச்செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த உடன், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 12 மினி பஸ்களும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது. அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.தலைமைச்செயலகத்தில் நடந்த விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ், போக்குவரத்துத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர்.கே.கோபால், மாநகர் போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் அ.அன்பு ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோன்று மற்ற மெட்ரோ ரெயில் நிலையங் களிலிருந்து மாநகர் போக்குவரத்துக்கழக இணைப்பு மினி பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மேலும் செய்திகள்