பரந்தூரில் 2-வது விமான நிலையம் - நாடாளுமன்றத்தில் வி.கே.சிங் பதில்

சென்னை பரந்தூர் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது.

Update: 2022-08-01 09:27 GMT

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது. எனவே சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது.

இதற்காக சுங்குவார்சத்திரம் அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பன்னூர், காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இதில் பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்கள் இறுதி செய்யப்பட்டன. அவற்றில் சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய விமான போக்குவரத்து ஆணையம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டு முதற்கட்ட சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்தது.

அதாவது, பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்களிலும் உள்ள மொத்த நிலப்பரப்பு, சாலை, ரெயில் போக்குவரத்தை சுலபமாக இணைக்கும் வசதி, மின்சார வசதி, சென்னை நகரில் இருந்து இந்த இடங்களை அடைவதற்கான தூரம் போன்ற பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு முதற்கட்ட சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூரை மாநில அரசு தேர்வு செய்திருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது. திமுக எம்.பி. கனிமொழி, என்.வி.என். சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங் இந்த பதிலை தெரிவித்துள்ளார்.

இறுதி செய்யப்பட்டுள்ள இடத்திற்கு இட அனுமதியை மாநில அரசு, மத்திய அரசுக்கு வழங்க வேண்டியுள்ளது. எனவே சென்னையில் மீனம்பாக்கத்திற்கு அடுத்ததாக பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்