பொதுமக்களிடம் இருந்து 30 மனுக்கள் பெறப்பட்டன

கோத்தகிரியில் நடந்த ஜமாபந்தி முகாமில் பொதுமக்களிடம் இருந்து 30 மனுக்கள் பெறப்பட்டன

Update: 2023-06-21 19:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி(வருவாய் தீர்வாயம்) முகாம் நேற்று தொடங்கியது. முகாமுக்கு ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட டாஸ்மாக் மேலாளருமான கண்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்ட தலைமை பொறுப்பாளர் (ஆயம்) சிவக்குமார், கோத்தகிரி தாசில்தார் காயத்ரி மற்றும் தாசில்தர்கள் மகேஸ்வரி (சமூக நலத்திட்டம்), மகேஸ்வரி (பழங்குடியின பிரிவு), துணை தாசில்தார் சதிஷ் நாயக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரித்து வரும் கிராம கணக்குகள், நில தீர்வை உள்ளிட்ட அரசுக்கு சேர வேண்டிய வருவாய் இனங்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட முறையில் எழுதப்பட்டு உள்ளனவா எனவும், கிராம கணக்கு, வட்டக் கணக்கு ஆகியவற்றை ஆய்வு செய்து கணக்குகளை முடிக்கும் பணியை ஜமாபந்தி அலுவலர் மேற்கொண்டதுடன், ஆவணங்களையும் ஆய்வு செய்தார். மேலும் மனுக்கள் மீது சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் அளித்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து 30 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, மின்சார வாரியம், வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்