ஆள் இல்லாத வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

கூடலூர் அருகே வீட்டுக்குள் புகுந்து பதுங்கிய சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Update: 2024-05-25 19:50 GMT

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், கரடிகள், சிறுத்தைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அவை ஊருக்குள் அடிக்கடி புகுந்து வருகின்றன. கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் கரடிகள் நடமாட்டம் கடந்த சில நாட்களாக உள்ளது.

இந்தநிலையில் ஸ்ரீமதுரை அருகே சேமுண்டி கொரவயல் பகுதியை சேர்ந்த சின்னம்மா என்பவரது காபி தோட்டத்தில் வீடு உள்ளது. இங்கு அவரது குடும்பத்தினர் யாரும் இல்லை. இதனால் காபி தோட்டத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் வீட்டை பயன்படுத்தி வந்தனர். நேற்று அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி இடும்பன் என்பவர் காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

பின்னர் அவர் மதியம் 12 மணியளவில் தோட்டத்தில் உள்ள வீட்டுக்குள் சென்றார். அப்போது வீட்டுக்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று திடீரென இடும்பன் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பாய முயன்றது. இதனால் சுதாரித்துக்கொண்ட இடும்பன் அலறியடித்தபடி வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடினார்.

அவரை சிறுத்தை ஆக்ரோஷமாக துரத்தியவாறு வந்தது. அந்த சமயத்தில் வீட்டுக்குள் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை உடைத்து கொண்டு சிறுத்தை பாய்ந்தது. தொடர்ந்து இடும்பன் வீட்டை விட்டு வெளியே ஓடிவந்ததுடன் சாமர்த்தியமாக முன்பக்க கதவையும் இழுத்து பூட்டினார். இதனால் சிறுத்தை வீட்டுக்குள் சிக்கியது. இதையடுத்து, தப்பித்தோம், பிழைத்தோம் என இடும்பன் பெருமூச்சு விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர், போலீசார் அங்கு விரைந்து வந்தனர். நீண்டநேர போராட்டத்துக்கு பின்னர் இரவில் அந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்