உலக சாதனையாக 5 ஆயிரம் மாணவர்கள் யோகா; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

உலக சாதனையாக சென்னையில் ஒரே நேரத்தில் அரசு பள்ளிக்கூடங்களை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் யோகா செய்தனர். இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று அசத்தினார்.

Update: 2023-01-07 22:42 GMT

சிற்பி திட்டம்

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிப்படுத்திடவும் 'சிற்பி' என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 14.9.2022 அன்று தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 2 ஆயிரத்து 558 மாணவர்கள், 2,442 மாணவிகள் என 5 ஆயிரம் பேர் இணைந்தனர். இந்த மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன் சட்டத்தை மதிக்கும் சிறந்த குடிமகனாக வளர வேண்டும் என்ற வகையில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று சிற்பி திட்ட மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் அதிகாரிகள் வகுப்பு எடுக்கின்றனர்.

யோகா பயிற்சி

இந்த நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிற்பி திட்ட மாணவ-மாணவிகள் 5 ஆயிரம் பேருக்கு யோகா பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. இதனை தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மேலும் அவர்கள், பள்ளி மாணவ-மாணவிகளுடன் இணைந்து பல்வேறு யோகாக்களை செய்து அசத்தினர். யோகா பயிற்சியால் உடல், மனதுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

உலக சாதனை

ஒரே நேரத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் யோகா செய்தது உலக சாதனையாக கருதப்படுகிறது. இதற்காக உலக சாதனை யூனியன், தமிழக இளம் சாதனையாளர்கள் சாதனை புத்தகம், உலக இளம் சாதனையாளர்கள் சாதனை புத்தகம் ஆகிய 3 அமைப்புகள் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சென்னை தலைமையக கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜெ.லோகநாதன், இணை கமிஷனர் பி.சாமூண்டிஸ்வரி, துணை கமிஷனர் எம்.ராமமூர்த்தி, சவுந்தரராஜன், ராதாகிருஷ்ணன், எம்.கோபால் உள்பட போலீஸ் அதிகாரிகளும், சிற்பி திட்ட ஒருங்கிணைப்பு பள்ளி ஆசிரியர்கள், அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்