சென்னை மெட்ரோ ரெயிலுக்கு ரூ.2 ஆயிரத்து 820 கோடியில் கூடுதல் பெட்டிகள்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரத்து 820 கோடியில் கூடுதல் பெட்டிகள் வாங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2023-08-03 07:01 GMT

சென்னை,

சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னை சென்டிரல்-பரங்கிமலை, சென்னை விமான நிலையம்-விம்கோ நகர் ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடங்களில் 4 பெட்டிகளுடன் கூடிய 52 ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது 4 பெட்டிகளை கொண்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் 3 பெட்டிகள் பொதுப்பிரிவினருக்கும், ஒரு பெட்டி பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயிலில் தினமும் 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

பெட்டிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், 'பீக் அவர்ஸ்' எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் குறிப்பிட்ட இந்த நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.

இதன்காரணமாக இந்த வழித்தடத்தில் கூடுதல் ரெயில்களை இயக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்தது. தற்போது இயக்கப்படும் ரெயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கை 4 ஆக இருப்பதால் பீக் அவர்சில் நெரிசல் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு கூடுதலாக இயக்க முடிவு செய்துள்ள ரெயில்களில் பெட்டிகளின் எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் 2028-ம் ஆண்டு இந்த வழித்தடங்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை எந்தளவுக்கு உயரும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் ரெயில்களை கொள்முதல் செய்வதற்கும் முடிவு செய்துள்ளது.

அதன்படி, தலா 6 பெட்டிகள் கொண்ட 28 ரெயில்களை புதிதாக வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தம் ரூ.2 ஆயிரத்து 820 கோடி நிதி தேவைப்படுகிறது.

இந்த நிதியை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறுவதற்கு முடிவு செய்து அதற்கான கருத்துருவையும் மெட்ரோ ரெயில் நிறுவனம் தயாரித்தது.

இந்த கருத்துருவை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஒப்புதலுக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. இதனை பரிசீலித்த தமிழக அரசு, பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 820 கோடி கடன் பெற்று புதிய ரெயில் பெட்டிகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனால், மத்திய அரசின் வழியாக பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து கடன் உதவி பெறுவதற்கு இந்த கருத்துரு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்