பலருடன் கள்ளத்தொடர்பு: இளம்பெண் கொலை - பெற்றோர், கணவர் கைது

புதுவண்ணாரப்பேட்டையில் இளம்பெண் கொலை வழக்கில் அவருடைய பெற்றோர் மற்றும் கணவரை போலீசார் கைது செய்தனர். பலருடன் கள்ளத்தொடர்வை கைவிட மறுத்ததால் கொன்றதாக கைதான தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2022-11-25 06:18 GMT

சென்னை புதுவண்ணாரப்பேட்டை, நாகூரான் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம் மீனவர். இவருடைய மனைவி சுமித்ரா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். சுமித்ராவுடன் அவருடைய தந்தை செல்வக்குமார், தாய் ரெஜினா ஆகியோரும் ஒரே வீட்டில் கூட்டுகுடும்பமாக வசித்து வந்தனர்.

கடந்த மாதம் 11-ந்தேதி வீட்டின் படுக்கை அறையில் சுமித்ரா, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் திடீரென மயங்கி இறந்து விட்டதாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு அவரது பெற்றோர் தகவல் கொடுத்தனர். போலீசார் சுமித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சுமித்ரா தலையில் உள்காயம் இருந்ததும், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதும் உறுதியானது. இதையடுத்து போலீசார், இதனை கொலை வழக்காக மாற்றி சுமித்ராவின் கணவர் செல்வம் மற்றும் தந்தை செல்வக்குமார், தாய் ரெஜினா ஆகியோரிடம் கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர்.

அப்போது சுமித்ராவுக்கு பலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால் அவரை பெற்றோர் மற்றும் கணவர் ஆகியோர் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சுமித்ராவின் கணவர் செல்வம் மற்றும் தந்தை செல்வக்குமார், தாய் ரெஜினா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் பிராவின்டேனி நடத்திய விசாரணையில் கொலை செய்தது எப்படி? என்பது குறித்து திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து கைதான ரெஜினா, போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

சுமித்ராவும், செல்வமும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். நாங்கள் ஏற்கனவே கூட்டு குடும்பமாக திருவொற்றியூர் பகுதியில் வசித்து வந்தோம். அங்கு சுமித்ராவுக்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்து வீட்டை காலி செய்து புதுவண்ணாரப்பேட்டை பகுதிக்கு வந்து விட்டோம்.

இங்கு வந்த பின்பும் பலருடன் என் மகள் சுமித்ராவுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. எப்போதும் அவள், செல்போனில் சிரித்து, சிரித்து பேசிக்கொண்டே இருப்பாள். இதனை பலமுறை அவளது கணவரும், நானும், எனது கணவரும் கண்டித்தோம். ஆனால் இதனை சுமித்ரா கண்டுகொள்ளவில்லை. அவளது கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது.

சம்பவத்தன்று காலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சுமித்ரா மாலை 3 மணிக்குத்தான் வீட்டுக்கு வந்தாள். வீட்டில் சாப்பிடுவதற்கு எதுவும் செய்யவில்லை. சமையல் செய்யாமல் எங்கு சென்று வந்தாய்? என்று கேட்டபோது திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலுக்கு சென்று வந்ததாக பொய் சொன்னாள்.

இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது கணவரும், சுமித்ராவின் கணவர் செல்வமும் இருந்தார்கள். வாக்குவாதம் முற்றியதையடுத்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் எங்களை சமாதானப்படுத்தினர். எனினும் சுமித்ரா மீது எங்களுக்கு கோபம் ஏற்பட்டது.

சிறிது நேரத்துக்கு பிறகு படுக்கை அறையில் தூங்கிக்கொண்டு இருந்த சுமித்ராவை எனது கணவர் செல்வக்குமார் கையைப்பிடித்துக் கொண்டார். செல்வம் காலை பிடித்துக்கொண்டார்.

பின்னர் நான், சுமித்ராவின் வாயை பொத்தி அவளது கழுத்தை நெரித்தேன். சிறிது நேரத்தில் சுமித்ரா இறந்து போனாள். அவள் தானாகவே மயங்கி விழுந்து விட்டாள் என கூறி நாடகமாடினோம்.

ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டது தெரிந்து விட்டது. பலருடன் தகாத உறவில் இருந்ததை கைவிட்டு விடும்படி பலமுறை கூறியும் கேட்காததால் சுமித்ராவை கொலை செய்தோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்