54 ஆண்டுகளுக்கு பின்னர் குன்றத்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்த முடிவு

54 ஆண்டுகளுக்கு பின்னர் குன்றத்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Update: 2023-10-04 06:46 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் புகழ் பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆண்டு தோறும் வரும் முக்கிய நாட்களில் இந்த கோவிலில் பூஜைகள், விசேஷங்கள் நடைபெறுவது வழக்கம் ஆனால் ஆண்டுதோறும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் புதிதாக கோவிலில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இதில் குன்றத்தூர் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்று வரும் நிலையில் சூரசம்ஹார நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படாமல் இருந்து வந்தது. மேலும் இந்த கோவிலில் கடந்த 1969-ம் ஆண்டு சூரசம்ஹாரம் நடைபெற்றதாகவும் அதன் பிறகு பல்வேறு காரணங்களுக்காக சூரசம்ஹாரம் நடத்துவது நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த ஆண்டு முதல் குன்றத்தூர் முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சூரசம்ஹாரத்தின் போது இருக்க வேண்டிய கடவுள்களின் சிலைகள் புதுப்பிக்கும் பணிக்காக வாகனங்களில் எடுத்து செல்லும் பணி நடைபெற்றது.

குன்றத்தூர் முருகன் கோவிலில் 54 ஆண்டுகளுக்கு பிறகு சூரசம்ஹாரம் நடத்தப்படுவது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது மேலும் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சி நவம்பர் மாதம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் அறங்காவலர்கள் தனசேகர், குணசேகர், ஜெயக்குமார், சங்கீதா மற்றும் கோவில் அலுவலர் ஸ்ரீகன்யா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்