பூக்கடை பகுதியில் சாலையோரம் படுத்து தூங்கிய முதியவர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி

சென்னை பூக்கடை பகுதியில் சாலையோரம் படுத்து தூங்கிய முதியவர், லாரி சக்கரத்தில் சிக்கி பலியானார்.

Update: 2023-10-06 08:48 GMT

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). சென்னை பூக்கடை பகுதியில் நடைபாதையில் தங்கி, செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி சுசிலா. இவர்களுக்கு காஞ்சனா என்ற மகளும், செல்வம் என்ற மகனும் உள்ளனர்.

சுப்பிரமணி நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் செருப்பு தைக்கும் வேலையை முடித்துவிட்டு சாலையோரம் படுத்து தூங்கினார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, சுப்பிரமணி மீது ஏறி இறக்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய சுப்பிரமணி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

பலியான சுப்பிரமணி உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த முருகேசன் (40) என்பவரை கைது செய்தார். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையை அடுத்த புழல் காந்தி பிரதான சாலையை சேர்ந்தவர் லூயிஸ் ஜோசப் ராஜ்(45). சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று காலை தன்னுடைய மகனை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விட்டு விட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

புழல் வடபெரும்பாக்கம் சாலையில் திருமண மண்டபம் அருகே வந்தபோது, அதே திசையில் வந்த கன்டெய்னர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த லூயிஸ் ஜோசப் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த முத்து(28) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்