பிரதமரின் கவுரவ நிதி உதவி திட்டத்தில் தொடரும் ஆவணங்கள் சரிபார்ப்பு

பிரதமரின் கவுரவ நிதி உதவித் திட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் ஆவணங்கள் சரிபார்ப்புப் பணிகளால் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Update: 2022-07-17 21:49 GMT

பிரதமரின் கவுரவ நிதி உதவித் திட்டத்தில் தொடர்ந்து நடந்து வரும் ஆவணங்கள் சரிபார்ப்புப் பணிகளால் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குளறுபடிகள்

பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் விவசாயப் பணிகள் மேற்கொண்டு வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்குக் கை கொடுக்கும் வகையில் மத்திய அரசால் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு விவசாயிக்கு ஆண்டுதோறும் ரூ.6000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி ரூ.2000 விதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிதி உதவித் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் வேளாண்துறையினரின் உதவியுடன் ஆவணங்கள் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்றது. இதில் ஒரு சில குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நிதி உதவி பெற்று வருவது தெரியவந்தது. இதனையடுத்து அவ்வாறு பெறப்பட்ட நிதியை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அவசரகதி

ஆரம்ப கட்டத்திலேயே விவசாயிகளிடமிருந்து முறையான ஆவணங்களைப் பெற்று பதிவேற்றம் செய்யாமல் அவசரகதியில் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதனை முறைப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஆவணங்கள் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் மட்டுமல்லாமல் அதிகாரிகளும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.பல விவசாயிகளுக்கு நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விவசாயிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என்று அதிகாரிகள் தரப்பிலும் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக விவசாயிகள் தரப்பிலும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலகங்களில் இன்று (திங்கள்) முதல் ஆவணங்கள் சரி பார்ப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகள் தங்களுடைய நில ஆவணங்கள், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், பான் கார்டு, புகைப்படம் ஆகியவற்றுடன் வேளாண்மைத்துறை அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

அவ்வாறு ஆவணங்களை முழுமையாக சரி பார்த்துக் கொள்ளாத விவசாயிகளுக்கு நிதி உதவி நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஆதார் அட்டை, இடையில் கைரேகை பதிவு, தற்போது நில ஆவணங்கள் என ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விதமான கூடுதல் ஆவணங்களுடன் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறுவது விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்