சிலந்தி ஆற்றில் தடுப்பணை; பணியை நிறுத்த கேரள அரசுக்கு உத்தரவு

உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-05-24 13:25 GMT

சென்னை,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தேவிகுளம் அருகே உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டது. இந்த தடுப்பணை கட்டினால் தமிழகத்தில் உள்ள திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் விவசாய பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் கேரளாவின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்தி அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம், கேரள அரசு மற்றும் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில் இன்று தாமாக முன்வந்து வழக்காக எடுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், "சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு உரிய அனுமதிபெற்றிருந்தால் மட்டுமே அத்திட்டத்தை தொடர அனுமதிக்க முடியும். உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.

உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கலிங்குதான் கட்டுகிறோம் என கேரள அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில், எந்த கட்டுமானமாக இருந்தாலும் உரிய அனுமதி பெற்ற பின்பே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்