பெண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பி டிரைவர் தொல்லை

முன்பதிவு செய்த காரை ரத்து செய்ததால் ஆத்திரத்தில் பெண்ணுக்கு அந்த காரின் டிரைவர் ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வாடகை கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-10-13 18:45 GMT

எலெக்ட்ரானிக் சிட்டி:

முன்பதிவு செய்த காரை ரத்து செய்ததால் ஆத்திரத்தில் பெண்ணுக்கு அந்த காரின் டிரைவர் ஆபாச புகைப்படங்களை அனுப்பி தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வாடகை கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குடியிருப்பு

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவரது மூத்த மகள் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். தினமும் அந்த பெண், தனது மகளை ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் சென்று அழைத்து வருவார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அவர் தனது மகள் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வருவதற்காக வாடகை கார் ஒன்றை பதிவு செய்தார்.

அந்த கார் வருவதற்கு நீண்ட நேரம் ஆனதாக தெரிகிறது. இதற்கிடையே அவரது மகள் அழத்தொடங்கினாள். இதனால் பொறுமையை இழந்த பெண், வாடகை காரை ரத்து செய்தார். பின்னர் வேறு ஆட்டோவில் செல்வதற்கு முயன்றார். அப்போது முன்பதிவு செய்து, பின் ரத்து செய்யப்பட்ட வாடகை கார் டிரைவர், அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

போலீசில் புகார்

அப்போது எதற்காக கார் பயணத்தை ரத்து செய்தீர்கள் என்று கேட்டு கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பெண், நீண்ட நேரமாக கார் வராத காரணத்தால் தனது மகள் அழத்தொடங்கியதாகவும், அதனால் வேறு வழியின்றி காரை ரத்து செய்துவிட்டு ஆட்டோவில் பயணிப்பதாகவும் கூறினார். எனினும், அந்த கார் டிரைவர் பெண்ணை தொடர்ந்து செல்போனில் அழைத்து தொல்லை கொடுத்தார்.

மேலும் பெண்ணின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை அவர் அனுப்பினார். இதைக்கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் தனது குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் ஒருவரிடம் இதுபற்றி கூறினார். உடனே அவர் கார் டிரைவரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டினார்.

இதையடுத்து அவர் ஆபாச புகைப்படங்களை அழித்தார். எனினும் அந்த பெண் தரப்பில் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசில் இதுபற்றி புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து அந்த கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்