கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த வழக்கு - 15 பேர் கைது

ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கைதானவர்கள் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2023-05-28 17:03 GMT

கோப்புப்படம்

கரூர்,

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன் தினம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, கரூர், கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் ஐதராபாத்திலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக மின்சாரத்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில்பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதனிடையே, கரூரில் வருமானவரித்துறை சோதனைக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தாக்கிய சம்பவங்களும் அரங்கேறி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், வருமானவரித்துறையினரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக வருமானவரித்துறையினர் போலீசில் புகார் அளித்தனர். அதேவேளை, வருமானவரித்துறையினர் தங்களை தாக்கியதாக திமுகவினரும் புகார் அளித்தனர்.

இந்த சூழலில், சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் லாரன்ஸ் உள்பட 7 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 7பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் கைதானவர்கள் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்