சரக்கு வாகனத்தில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; வாலிபர் கைது

விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-09-09 00:15 IST

ரேஷன் அரிசி கடத்தல்

விழுப்புரம் அருகே வெண்மணியாத்தூர் பகுதியில் நேற்று காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த வாகனத்தினுள் 17 சாக்கு மூட்டைகளில் 1,000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்

உடனே அந்த சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் எம்.புதூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் பிரவீன்குமார் (வயது 23) என்பதும், இவர் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை வெளிமார்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்திச்செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து பிரவீன்குமாரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்