அமலாக்கத்துறை ஆவணங்களை ஆய்வு செய்ய செந்தில்பாலாஜிக்கு கோர்ட்டு அனுமதி

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Update: 2024-01-04 18:20 GMT

கோப்புப்படம்

சென்னை,

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி புழல் சிறையில் இருந்து வருகிறார்.

இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு எதிராக 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் தன்னிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல் அமலாக்கத்துறை வசம் உள்ள ஆவணங்களை வழங்கக்கோரி சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் செந்தில்பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கிற்கு தொடர்புடைய அனைத்து அசல் ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்டுவிட்டது என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடரந்து, இந்த மனுவை திரும்ப பெறுவதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செந்தில்பாலாஜி மனுவை தள்ளுபடி செய்தார்.

அதேவேளையில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த அசல் ஆவணங்களை, நீதிமன்ற பணி நேரத்தில் செந்தில்பாலாஜி தரப்பு ஆய்வு செய்து கொள்ள அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 14-வது முறையாக அவரது காவல் நீட்டிக்கபட்டது.

இதனிடையே ஜாமீன் கோரி 3-வது முறையாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு வரும் திங்கட்கிழமை (ஜனவரி 8ந் தேதி) விசாரணைக்கு வர உள்ளது. இந்த மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்