4 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது

என்ஜினீயர் வெட்டிக்கொலையில் 4 பேர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2023-03-18 19:55 GMT

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி செம்பத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். என்ஜினீயர். இவர் கடந்த 15.5.2022 அன்று அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது காரில் வந்த ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் ஆசைத்தம்பி (வயது 28), அலெக்ஸ்குமார் (25), கதிரவன் (34), வினோத்குமார் (27) ஆகியோர் கைதானார்கள். பின்னர் இவர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.

தற்போது தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், அவர்களை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் 4 பேரின் பெற்றோர் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் வக்கீல் ஆஜராகி, மனுதாரர்களின் உறவினர்கள் இதுவரை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யவில்லை. அவர்கள் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவு சட்டவிரோதமானது. அவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

பின்னர் கூடுதல் அரசு வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி, இந்த கொலையை பழிவாங்கும் நோக்கத்தில்தான் கைதானவர்கள் செய்து உள்ளனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவர்களின் நடவடிக்கைகள் இருந்ததால்தான் அவர்கள் மீது குண்டர்சட்டம் பாய்ந்துள்ளது. குண்டர் சட்ட நடவடிக்கைகள் பல்வேறு காரணங்களால் சில நாட்கள் தாமதமானது. இதுபோன்ற தாமதத்தை ஏற்க வேண்டும். மனுதாரர்களை வெளியில் விட்டால் பல்வேறு குற்றங்களில் தொடருவார்கள் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

குண்டர் தடுப்புச்சட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு வக்கீல் அளித்த காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பல்வேறு வழக்குகளில் இதே காரணங்களை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்து உள்ளது. இந்த வழக்கில் கைதானவர்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரும் மனுதாரர்கள் தரப்பு கருத்துகளை ஏற்க இயலாது. இந்த ஆட்கொணர்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்