நடவடிக்கை எடுக்கப்பட்டது
ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் வழியாக செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கடல்வாழ் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரி முன்பு கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் குடிநீர் சாலையில் வீணாக பாய்ந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சாலையில் தேங்கும் மழைநீர்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பறக்கை பாத்திமா நகரில் சாைல மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலை எது? பள்ளம் எது? என தெரியாமல் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையை சீரமைத்து போதிய வடிகால் வசதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முஹம்மது இப்திகார், பாத்திமாநகர்.
சுகாதார சீர்கேடு
மேலசங்கரன்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பாம்பன்விளை பகுதியில் பஸ் நிறுத்தம் எதிரே சிலர் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளும், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி மேலும் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி சுகாதாரத்தை பேண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜி.சுபின், பேயன்குழி.
சாலை சீரமைக்கப்படுமா?
கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இடலாக்குடியில் இருந்து நாகர்கோவில் ரெயில் நிலையம் சந்திப்பு வழியாக கோட்டாருக்கு ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்களும், ரெயில் பயணிகளும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சி.ராம்தாஸ், சந்தையடி.
பக்க சுவர் இடிந்தது
ஆற்றூர் பேருராட்சிக்கு உட்பட்ட புளியமூடு சந்திப்பில் இருந்து சற்று தொலைவில் வலதுபுறம் திருநிழல்தாங்கல் அருகில் ஏற்றக்கோடு செல்லும் சாலை குண்டும் குழியுமாகும் உள்ளது. மேலும் இந்த சாலையில் கட்டப்பட்டுள்ள பக்க சுவர் இடிந்து விழுந்து காணப்படுகிறது. இந்த வழியாக தினமும் பள்ளி வாகனங்கள் உள்பட ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தற்போது மழை பெய்து வரும் நிலையில் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், சாலை துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பக்க சுவரை சீரமைத்து சாலைய செப்பனிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.வி.விஷ்ணு பிரசாத், ஆற்றூர்.
காத்திருக்கும் ஆபத்து
தோவாளை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடுக்கரை பஞ்சாயத்தில் மேலத்தெரு பகுதியில் கழிவுநீர் ஓடை சிமெண்ட் சிலாப் போட்டு மூடப்பட்டுள்ளது. தற்போது அந்த சிமெண்ட் சிலாப் உடைந்து துளை ஏற்பட்டுள்ளது. அந்த தெரு வழியாக குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என பலதரப்பட்ட மக்கள் செல்கிறார்கள். சிலாப்பில் ஏற்பட்டுள்ள துளை பெரிதாகி பேராபத்து ஏற்படும் முன்பு அதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆச்சிபிள்ளை, கடுக்கரை.
மழைநீர் ஒழுகும் பஸ்கள்
நாகர்கோவிலில் இருந்து பள்ளத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்சின் மேற்கூரை மிகவும் சேதமடைந்து மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் இந்த பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இதுபோல் குமரி மாவட்டத்தில் பல பஸ்கள் மழைக்காலங்களில் பயணம் செய்ய முடியாத வகையில் ஒழுகுகிறது. எனவே பஸ்களின் மேற்கூரையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா, புதூர்.