தர்மபுரியில் இலவச வேட்டி, சேலை வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் இலவச வேட்டி, சேலை வழங்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-14 18:45 GMT

பொங்கல் பண்டிகையையொட்டி தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.1000 ரொக்க பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு செங்கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தர்மபுரி நகரில் குப்பா கவுண்டர் தெருவில் உள்ள ரேஷன் கடையில் 7 மற்றும் 19-வது வார்டு வார்டுகளுக்கு உட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இலவச வேட்டி, சேலை வழங்காததால் அந்த பகுதி பொதுமக்கள் ரேஷன் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள நகராட்சி கவுன்சிலர்கள் சத்யா கார்த்திகேயன், உமயாம்பிகை நாகேந்திரன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு அறிவித்த இலவச வேட்டி, சேலை வழங்காததை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஓரிரு நாளில் இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்