'மக்களின் நம்பிக்கையை இழந்த தி.மு.க. அரசு'

மக்கள் நம்பிக்கையை தி.மு.க. அரசு இழந்து விட்டது என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார்.

Update: 2023-08-02 19:45 GMT

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நத்தம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க.வின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். மேலும் இதுபோன்று எத்தனை மாநாடு நடத்தப்பட்டாலும் தொண்டர்கள் திரளாக பங்கேற்று எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும். தி.மு.க. அரசின் தற்போதைய செயல்பாட்டால் மக்களின் நம்பிக்கையை பெற முடியாமல் தோல்வியடைந்துவிட்டது.

தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கோடநாடு விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் தான். ஆனால் சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எதிராக தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் தற்போது அவர்களுடனேயே சேர்ந்து கோடநாடு விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் நாடகமாடுகிறார். தி.மு.க.வும் இவர்களை பயன்படுத்தி அ.தி.மு.க.வை வீழ்த்த திட்டமிடுகிறது. இவர்களின் சதி செயல்களை தவிடு பொடியாக்கி தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி மீண்டும் மலருவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.பி. உதயகுமார், மாவட்ட இணை செயலாளர் தேன்மொழி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் வேணுகோபாலு, மாவட்ட சார்பு அணி செயலாளர் அன்வர்தீன், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ராமராஜ், முருகன், மோகன், யாகப்பன், பழனி தொகுதி ஜெயலலிதா பேரவை நிர்வாகி ரவி மனோகரன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணை செயலாளர் தாமஸ் அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்