பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரக்கோரி பால் உற்பத்தியாளர்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-19 19:08 GMT

நூதன ஆர்ப்பாட்டம்

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தரக்கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இடைக்கட்டு கிராமத்தில் உள்ள ஆவின் பால் அலுவலகம் முன்பு நேற்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது விவசாயிகள் மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பால் நிறுத்த போராட்டம்

இதையடுத்து, பால் கொள்முதல் விலையை உயர்த்தாத தமிழக அரசையும், பால்வளத்துறையையும், ஆவின் நிர்வாகத்தையும் கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் தலையில் முக்காடு போட்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ளது போல் ஒரு லிட்டருக்கு பாலுக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும். தரமான கால்நடை தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்.

பேரறிஞர் அண்ணா காப்பீடு திட்டத்தில் மாறுதல் செய்து கறவை மாடுகளின் விபத்து மரணம், நோய் மரணம் ஆகியவற்றுக்கு கூடுதல் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கறவை மாடுகள் வாங்க வங்கி கடனும், அதனை பராமரிக்க வட்டியில்லா கடனும் வழங்க வேண்டும். ஆரம்ப சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசையும், பால்வளத்துறையையும், ஆவின் நிர்வாகத்தையும் வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்தில் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்