பொன்முடி பதவியேற்பு பிரச்சினையிலும் கவர்னர் தனது அதிகார வரம்பை மீறுகிறார் - கே.பாலகிருஷ்ணன் கண்டனம்

தமிழ்நாடு கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றிட வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Update: 2024-03-18 17:27 GMT

கோப்புப்படம் 

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரான க.பொன்முடி அவர்களை மாநில அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருக்கிறார். சட்ட ரீதியான தடைகள் ஏதும் இல்லாத போது மாநில அரசின் பரிந்துரையை நிறைவேற்றுவது தான் மாநில கவர்னரின் கடமை ஆகும். ஆனால், தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளுக்கும், முடிவுகளுக்கும் முட்டுக்கட்டை போடுவதே கவர்னரின் செயலாக இருக்கிறது.

க.பொன்முடி பதவியேற்பு பிரச்சினையிலும் கவர்னர் ஆர்.என்.ரவி தனது அதிகார வரம்பை மீறுகிறார். இது முதல்வரின் பரிந்துரையையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் அப்பட்டமாக மீறுகிற நடவடிக்கைகள் ஆகும். க.பொன்முடி மீதான தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருக்கும் நிலையில்தான், அவருக்கு அமைச்சர் பதவி அளிப்பதற்கு மாநில அரசு பரிந்துரை செய்திருக்கிறது. இதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை. மேலும், ஒருவர் குற்றவாளி என்று இறுதி தீர்ப்பளிக்கப்படும் வரை அவர் நிரபராதி தான்" என்கிற சட்டவிதிகளின் அடிப்படையில் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என்று சபாநாயகர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவே, தமிழ்நாடு கவர்னர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறைவேற்றிட வேண்டும். மாநில அரசின் பரிந்துரையை ஏற்று க.பொன்முடி அவர்களை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்