மாணவர்கள் கடின உழைப்பு இருந்தால் உயர்ந்த நிலைக்கு வரலாம்-கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பேச்சு

'மாணவர்கள் எந்த படிப்பு படித்தாலும் கடின உழைப்பு இருந்தால் உயர்ந்த நிலைக்கு வரலாம்' என்று கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பேசினார்.

Update: 2023-02-17 07:00 GMT

சுரண்டை:

'மாணவர்கள் எந்த படிப்பு படித்தாலும் கடின உழைப்பு இருந்தால் உயர்ந்த நிலைக்கு வரலாம்' என்று கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பேசினார்.

கருத்தரங்கம்

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தலைமை தாங்கினார். நெல்லை வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் மகாலட்சுமி, தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரம்யா, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் மாரியம்மாள், தென்காசி மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் ஜார்ஜ் பிராங்கிளின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் அருள்முகிலன் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கண்காட்சி மற்றும் கருத்தரங்கனை தொடங்கி வைத்தார். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

கடின உழைப்பு

அப்போது அவர் கூறியதாவது:-

நானும் உங்களைப் போல கிராமப்புறத்தில் அமைந்துள்ள கல்லூரியில் இயற்பியல் பயின்று இந்த நிலைக்கு உயர்ந்து உள்ளேன். அதுபோல் நீங்களும் நன்கு படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும். மருத்துவமும், பொறியியலும் மட்டுமே உயர்ந்த படிப்பு என்று மாணவர் மத்தியில் ஒரு மாயத் தோற்றம் உள்ளது. எந்த ஒரு படிப்பு படித்தாலும் கடின உழைப்பு இருந்தால் உயர்ந்த நிலைக்கு வரலாம்.

சாதாரண பட்டப்படிப்பு படித்துவிட்டு போட்டி தேர்வுகள் எழுதி உயர்ந்த பதவிகளுக்கு வரலாம். கல்லூரியில் உள்ள நூலகங்கள் சாதனை மனிதர்களை உருவாக்கும் இடமாக உள்ளது. எனவே மாணவ-மாணவிகள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நீங்கள் வேலை தேடுபவராக இல்லாமல் வேலை வழங்குபவராக உயர வேண்டும் என்பது எனது விருப்பம். தென்காசி மாவட்டத்தில் விரைவில் தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது. நீங்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவீர்கள் என நான் எண்ணுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

சான்றிதழ்

தொடர்ந்து பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி அனுஷாவுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார். பின்னர் வேலை வாய்ப்பு குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலைய உதவி இயக்குனர் ஹரி பாஸ்கர், கருத்துரை ஆற்றினார். முடிவில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் மார்த்தாண்டபூபதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்