ெஜயலலிதா கார் மீது கல்வீச்சு சம்பவத்தில்ஓ.பன்னீர்செல்வம் தேனி கோர்ட்டில் ஆஜர்:வீடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சியம் அளித்தார்

பசும்பொன்னில் 2008-ம் ஆண்டு ஜெயலலிதா கார் மீது கற்களை வீசிய சம்பவத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி கோர்ட்டில் ஆஜராகி ராமநாதபுரம் நீதிபதியிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சாட்சியம் அளித்தார்.

Update: 2023-10-13 18:45 GMT

ஜெயலலிதா கார் மீது தாக்குதல்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்துக்கு சென்றார். அப்போது ஜெயலலிதா தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்தார்.

தேவர் நினைவிடத்தின் நுழைவு வாயில் பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் ஜெயலலிதா கார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் சென்ற காரின் கண்ணாடி உடைந்தது. அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வாகனம், கருப்பு பூனைப்படை வீரர்கள் வந்த வாகனம் ஆகிய வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வாகனங்களின் கண்ணாடியும் உடைந்தது.

இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்பட சிலர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் செங்கோட்டையன் இந்த வழக்கில் ஏற்கனவே சாட்சியம் அளித்து விட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் சாட்சியம்

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சாட்சி அளிக்க வேண்டி இருந்தது. அவர் வீடியோ கான்பரன்ஸ் (காணொலி காட்சி) மூலம் சாட்சியம் அளிக்க விரும்பினார். அதன்படி, இந்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் நேற்று பகல் 12.20 மணியளவில் வந்தார். அவருடன் மூத்த வக்கீல் சந்திரசேகரன், முன்னாள் அரசு வக்கீல் வெள்ளைச்சாமி உள்பட 10-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் குழுவினர் வந்தனர்.

கோர்ட்டு வளாகத்தின் முதல் தளத்தில் காணொலி காட்சி மூலம் விசாரணை மற்றும் சாட்சியம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறைக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.

ராமநாதபுரத்தில் இருந்தபடி ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குமரகுரு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தினார். அவரிடம் தேனி கோர்ட்டில் இருந்தபடி ஓ.பன்னீர்செல்வம் சாட்சியம் அளித்தார். சாட்சியம் அளித்துவிட்டு 2.55 மணியளவில் கோர்ட்டில் இருந்து வெளியே வந்தார்.

பலத்த பாதுகாப்பு

அப்போது நிருபர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், 'கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 30-ந்தேதி தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, பசும்பொன் கிராமத்துக்கு புகழஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதா வந்தபோது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் உடன் இருந்தவன் என்ற காரணத்துக்காக நான் சாட்சியம் அளிக்க கோர்ட்டுக்கு வந்துள்ளேன்' என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் சாட்சியம் அளிக்க வந்ததால் தேனி கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்