சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி

அய்யப்ப பக்தர்கள் சீசன் முடிந்ததால் சுற்றுலா பயணிகள் இன்றி கன்னியாகுமரி வெறிச்சோடியது.

Update: 2023-02-01 18:45 GMT

கன்னியாகுமரி:

அய்யப்ப பக்தர்கள் சீசன் முடிந்ததால் சுற்றுலா பயணிகள் இன்றி கன்னியாகுமரி வெறிச்சோடியது.

கன்னியாகுமரி

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் இங்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளும் மற்றும் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகமாக காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது.

மேலும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை காரணமாகவும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். எனவே இதுவும் சீசன் காலமாக கருதப்படுகிறது. இதுபோக பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் வழக்கமான நாட்களை விட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அய்யப்ப பக்தர்கள் சீசன் நிறைவு

அதன்படி கடந்த நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் நடந்து வந்த அய்யப்ப பக்தர்கள் சீசன் காலம் தற்போது நிறைவடைந்தது. இந்த காலத்தில் கூட்டம் அலைமோதியதால் கன்னியாகுமரி களை கட்டியது. தற்போது இந்த சீசன் முடிவடைந்ததால் கன்னியாகுமரி பகுதியில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த தற்காலிக கடைகள் அகற்றப்பட்டன.

மேலும் அங்கு சுற்றுலா பயணிகள் வருகை நேற்று முதல் குறைந்து காணப்பட்டது. காலையில் முக்கடல் சங்கம கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

காலை 8 மணி முதல் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும். ஆனால் நேற்று குறைவான பயணிகளுடன் அவ்வப்போது மட்டுமே படகு சேவை நடந்தது. இதனால் கன்னியாகுமரி களையிழந்து காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்