கருணாநிதி பிறந்த நாளன்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும்

வருகிற 3-ந்தேதி கருணாநிதி பிறந்த நாளன்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும் என தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.

Update: 2022-05-30 21:02 GMT

வடலூர், 

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வடலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. இளபுகழேந்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஞானமுத்து, மனோரஞ்சிதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், வேளாண்மைத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பக்குவமாக நடந்து  கொள்ளவேண்டும்

புதிதாக பதவி ஏற்ற மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்களுக்கு வாய், கை அடக்கம் தேவை. அனைவரிடமும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். முதல்வர் மீது பொதுமக்களுக்கு மதிப்பு கூடியுள்ளது. கடந்த ஆட்சியாளர்களின் செயல்பாட்டால் நிதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிதி தட்டுப்பாட்டையும் சரி செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு முதல்-அமைச்சருக்கு ஏற்பட்டுள்ளது.

அனைத்து சமூகத்தினரும் எனக்கு வேண்டப்பட்டவர்கள் தான். நான் வேறுபாடு பார்ப்பதில்லை. உழைப்புக்கு மரியாதை தருவேன். கடலூர் மாவட்டத்தில் வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும். எனவே அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வருகிற 3-ந்தேதி மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை கிழக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். இவ்வாறு பேசினார்.

தீர்மானம்

கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் அன்று மாவட்டத்திலுள்ள மாநகரம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி கிளைகள் தோறும் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி கட்சி கொடியேற்றி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் உருவ சிலையை நிறுவியும், அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் நகர செயலாளர்கள் கடலூர் கே.எஸ்.ராஜா, சிதம்பரம் செந்தில்குமார், வடலூர் தமிழ்ச்செல்வன், வடலூர் நகரமன்ற தலைவர் சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, நாராயணசாமி, மதியழகன், சபாநாயகம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், ஜேம்ஸ் விஜயராகவன், பேரூராட்சி தலைவர்கள் கணேசமூர்த்தி, கந்தன், கிள்ளை பேரூராட்சி துணை தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்